தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக ஏமாற்றாதீர்கள்' - தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை! - Director of Public Health

சென்னை: கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தற்போது போடப்படும் என ஏமாற்றாதீர்கள் என சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுரை வழங்கியுள்ளார்.

தடுப்பூசி
தடுப்பூசி

By

Published : Jan 28, 2021, 8:25 AM IST

Updated : Jan 28, 2021, 9:54 AM IST

தமிழ்நாட்டில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ஆம் தேதி முதல், 166 மையங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிற்கு கோவிஷீல்ட் தடுப்பூசி 10 லட்சத்து 45 ஆயிரமும், கோவாக்சின் தடுப்பூசி ஒரு லட்சத்து 89 ஆயிரம் வந்துள்ளன. சுகாதாரத் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக சுமார் 5 லட்சத்து 19 ஆயிரம் பேர் கோவின் இணையத்தில் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.

ஜனவரி 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 82,019 சுகாதாரத் துறை பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். எனவே, அதிகளவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலும், ஒன்றியம், நகர பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம்:
இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "சுகாதாரத் துறை பணியாளர்கள், தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்களை கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கோவின் செயலி

தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் கோவின் செயலியில் நிச்சயம் பதிவு செய்திருக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்போது அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். தடுப்பூசியை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கடிதம்

பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடையாது
தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், உதவியாளர்களின் விவரங்களை, மருத்துவமனைகள் கோவின் ஆப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் சுகாதார பணியாளர்கள் பதிவு செய்தால் அனுமதி கிடைத்த பின்னர் வழங்கப்படும். பதிவு செய்யாத சுகாதாரத் துறை பணியாளர்கள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி அரசு, தனியார் மருத்துவமனையில் தற்பொழுது போடப்படாது. எனவே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என ஏமாற்றாதீர்கள்.

நர்சிங் ஹோம் கிளினிக் பணியாளர்களும் பதிவு செய்ய வேண்டும்
சிறிய தனியார் மருத்துவமனைகள் நர்சிங் ஹோம் கிளினிக் ஆகியவற்றில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களையும் பதிவு செய்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க திட்டமிட்டு செயல்படுங்கள்.

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை
தற்போது வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதுகுறித்து முறைப்படி அறிவிப்புகள் வெளியிடப்படும். மருத்துவமனையில் தற்போது பொதுமக்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டாம். மீறி செயல்பட்டால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated : Jan 28, 2021, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details