சென்னை: பத்தாம் மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலைத் தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து அளிக்க வேண்டும் எனவும், தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழின் அடிப்படையில் தான் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பதால் தேர்வரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தேர்வரின் பெற்றோரின் முன்னிலையில் தயார் செய்து உரியப் படிவத்தில் கையொப்பம் பெறுதல் வேண்டும். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின்னர் திருத்தங்கள் கேட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பக்கூடாது எனவும் அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "2023-2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு EMIS-ல் (Education Management Information System) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த தகவல்களைப் பயன்படுத்தியே 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. எனவே அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான EMIS உள்ள தங்களின் பள்ளி மாணவர்களின் தகவல்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து திருத்தங்கள் இருந்தால் உடனே திருத்தம் செய்ய வேண்டும்.
மாணவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் பிறந்த தேதியைப் பிறப்பு சான்றிதழுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட உள்ளதால் சரியான எண்ணைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.