சென்னை: கொம்பன், மருது, விருமன் என கிராமத்து கதைகளை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் முத்தையா. இவரது படங்களில் மண் வாசம் வீசும். இவர் தற்போது ஆர்யாவை வைத்து ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் முத்தையா, நடிகர் ஆர்யா, சித்தி இத்னானி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகை சித்தி இத்னானி "எனது முதல் படமான வெந்து தணிந்தது காடு படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்துக்கும் கொடுங்கள்" என்று கூறினார்.
பின்னர் பேசிய இயக்குனர் முத்தையா, "வந்துள்ள பத்திரிகையாளர்களுக்கு நன்றி. எனது ஒவ்வொரு படத்திலும் உறவுகளைப் பற்றி சொல்லி உள்ளேன். இதில் உறவுகளிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளேன். நன்றி இருந்தால் உறவுகளிடம் பிரச்சனை இருக்காது என்று சொல்லி உள்ளேன். கொம்பன் படத்துக்கு பிறகு மீண்டும் கதைக்களம் இராமநாதபுரம் தான். இந்தப் படம் யார் மனதும் புண்படுத்தும் படி இருக்காது" என்றார்.
மேலும் பேசிய அவர் "ஒருவர் மனதை புண்படுத்தும் படி என் வாழ்க்கையில் நான் அப்படி ஒரு போதும் செய்யமாட்டேன். உறவுகளிடம் நன்றி இருக்க வேண்டும் என்பதை மண்மணம் மாறாமல் சொல்லியுள்ளேன். சில நல்ல விஷயங்கள் கிராமத்திலும் இருக்கிறது. நகரத்து கதைகளும் பண்ண ஆசை இருக்கிறது. விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார். மேலும் இதனை நீங்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும். இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக செய்து உள்ளனர்.