சென்னை: தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வோரு ஆண்டும் இந்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளின் முதன்மையான நோக்கம் திரையுலகைச் சார்ந்த பிரபலங்களை அங்கீகரிப்பதே ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 69வது தேசிய விருது பெறும் பட்டியலை நேற்று (ஆகஸ்ட் 24) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அறிவித்துள்ளது.
இதில் தமிழ் படங்கள் அதிகம் தேர்வு செய்யப்படாத நிலையில், சிறந்த பிராந்திய மொழி பிரிவில் இயக்குனர் மணிகண்டன் இயக்கிய “கடைசி விவசாயி” படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் அப்படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் அன்பான வணக்கம். மக்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான கடைசி விவசாயி படத்திற்கு, இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.