ஏ.ஆர். ரகுமான் செய்ததை மற்ற நடிகர்கள் செய்யவில்லை - ஆர்.கே. செல்வமணி ஆதங்கம்! சென்னை: இயக்குநர் மணிரத்னம் 'பூமிகா' எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றின் மூலம் உதவிகள் பல செய்து வருகிறார். இந்நிலையில் இன்று பூமிகா அறக்கட்டளை மூலம் பெஃப்சி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 24 பேருக்கு ரூபாய் 1 லட்சம் என மொத்தம் 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழ்த் திரைப்படத்துறை சீரான வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறையோடு நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு சில விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிய அவர் ஒரு படத்திற்கான பட்ஜெட், படப்பிடிப்பு செலவுகள் என அனைத்தும் அதிகரித்துள்ள நிலையில் இரு தரப்பினரும் கலந்து பேசியதன் முடிவாக இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.
ஒரு படம் தொடங்கும் முன் மொத்த பட்ஜெட், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் உள்ளிட்டவற்றை முறையாக தயார் செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் படத்தின் இறுதிகட்டத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
அதேபோன்று, கேமராமேன்கள் தங்களது உதவி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரைத்தான் முக்கியமான பணிகளுக்கு பயன்படுத்தவேண்டும் எனவும்; வெளி ஆட்களை பயன்படுத்தக்கூடாது, அப்படி அவரால் ஏதாவது பிரச்னை வந்தால் அவர் சங்கத்தின் மூலம் சஸ்பெண்ட் செய்யப்படுவார் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது - நடிகர் சந்தானம் அறிவுரை
மேலும் இந்த ஆண்டு மட்டும் ஆறு ஊழியர்கள் உயிரிழந்து உள்ள நிலையில், விபத்து நடக்காமல் இருக்க குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பாளர் சங்கம் 50 சதவிகிதம் செய்து கொடுத்துள்ளதாக கூறினார். மேலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான பாதுகாப்பு வசதிகள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இனி தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த நிபந்தனைகள் குறித்து பரிந்துரை கடிதம் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து படப்பிடிப்புக்கு தாமதமாக வரும் நடிகர்கள், தேதி கொடுத்துவிட்டு வராமல் இருக்கும் நடிகர்கள் பற்றியும் நடிகர் சங்கத்திடம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், இதுபோன்ற நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நடிகர் சங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது, ''அனைத்து பெஃப்சி தொழிலாளர்களுக்கும் விபத்து காப்பீடு இல்லை. அதனால் இந்த ஆண்டுக்குள் அனைத்தும் முறைப்படுத்தி 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அனைவருக்கும் காப்பீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்களின் பாதுகாப்புக்கு வரும் பவுன்சர்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அதேபோல், நடிகர்கள் அனைவரும் பெஃப்சி தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக அவர்களது ஊதியத்தில் இருந்து ஒரு சதவிகிதத்தை நிதியாக தர வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்'' எனக் கூறினார்.
மேலும் அவர், 'ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் உயிரிழந்த லைட்மேனுக்காக அவர் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி கொடுத்தார். அவருக்கு இருந்த நல்ல மனம் யாருக்கும் இல்லை. அவர் இந்த முயற்சியை தொடங்கி வைத்தார். ஆனால், அதன்பிறகு யாரும் உதவ முன்வரவில்லை. இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பெஃப்சி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு!