சென்னை:தமிழ் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீ-டு விவகாரம் பூதாகராமானபோது, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை எதிர்த்து இயக்குநர் சுசி கணேசன், இயக்குநர் லீனா மணிமேகலை மீது கிரிமினல் மற்றும் சிவில் மான நஷ்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் நான்கு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே நான்கு மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சுசி கணேசனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக லீனா மணிமேகலை ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தார். லீனா மணிமேகலை, தன் மீது பொய் புகார் கூறியதோடு, சாதி, மத மோதலை தூண்டும் விதமாக பேசி வருவதாகவும், இந்த குற்றச்சாட்டில் இருக்கும் உண்மையை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்குநர் சுசி கணேசன், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பி கிண்டி மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை காழ்ப்புணர்ச்சி காரணமாக சுசி கணேசன் மீது பொய்யான புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கனடாவில் இருக்கும் லீனா மணிமேகலையின் உயிருக்கு சுசி கணேசன் எப்படி ஆபத்தாக இருப்பார்? என்ற கேள்விக்கு லீனா மணிமேகலை முறையாக பதில் அளிக்கவில்லை என்றும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலிருந்து அவரது புகார் பொய்யானது என தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.