சென்னை விமான நிலையத்தில் இயக்குனர் கௌதமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்துவந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
'தமிழ்நாடு-புதுச்சேரி ஆளுநர்களைப் போல தமிழிசை இருக்கக் கூடாது' - இயக்குநர் கௌதமன்
சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி ஆளுநர்களைப் போல இல்லாமல் தெலங்கானா மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன நல்லது செய்ய முடியுமோ அதனை தமிழிசை சௌந்தரராஜன் செய்ய வேண்டும் என்று இயக்குநர் கௌதமன் வலியுறுத்தியிருக்கிறார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தோல்வியடைந்த பிறகு நிர்மலா சீதாராமனைப் போல மாநிலங்களவை உறுப்பினராக தமிழிசையை தேர்வு செய்து மத்திய அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள், அப்படி செய்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றார். ஆளுநர் பதவியில் நேர்மையாகவும், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையிலும் தமிழிசை நடந்து கொண்டால் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கௌதமன் கூறினார்.
புதுச்சேரியை கதறச் செய்யும் கிரண்பேடியைப் போலவும், தமிழ்நாட்டில் கத்திக் கதறி ஒப்பாரி வைத்து ஏழு பேர் விடுதலைக்காக இன்னும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கூட, அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைப் போலவும் இல்லாமல் நல்ல முறையில் பணியை தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், தெலங்கானா மண்ணுக்கும் மக்களுக்கும் என்னவெல்லாம் நல்லது செய்ய முடியுமோ அதனை தமிழிசை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மரியாதையை வாங்கிக் கொடுத்தால் அதுவே பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கௌதமன் தெரிவித்தார்.