தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மகத்தான மனித பாசங்களை கண்ட காலம் இது' - இயக்குநர் கௌதமன்

சென்னை: கரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்டதாக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

கௌதமன்
கௌதமன்

By

Published : Sep 10, 2020, 6:06 AM IST

திரைப்பட இயக்குநரும், சமூக நல ஆர்வலருமான கௌதமன் தற்போது 'தமிழ் பேரரசு கட்சி' என்னும் அரசியல் கட்சியை நடத்திவருகிறார். சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது கௌதமன் கரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எனது உயிருக்கு நிகரான தாய்த் தமிழ் உறவுகளுக்கும் ஊடக நண்பர்களுக்கும் என்மீது அளவற்ற பாசத்தை காட்டிய அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம்.

கரோனா தொற்றில் சிக்குண்ட செய்தியறிந்து பெரும் கவலையுடன் விசாரித்தவர்கள், பதட்டத்தை பகிர்ந்து கொண்டவர்கள், கதறி அழுது நலம் விசாரித்தவர்கள் என என் மீது பற்று கொண்டு விதவிதமான, மகத்தான மனித பாசங்களை நெகிழ நெகிழ நான் கண்ட காலம் இது.

எழுபது சதவிகிதம் சித்த மருத்துவத்தையும் முப்பது சதவிகித அலோபதி (ஆங்கில) மருத்துவத்தையும் எடுத்துக்கொண்டேன். முழுவதுமாக கரோனாவிலிருந்து நான் மீள காரணமாக அமைந்தது முதலில் சித்த மருத்துவம்தான்.

பாசத்திற்குரிய சித்த மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைப் போலவே எனது அன்பிற்குரிய அலோபதி மருத்துவ சகோதரர்களும் என் மீது காட்டிய பாசத்தை இந்நேரத்தில் மறக்கவே முடியாது. எனக்கு மருத்துவம் பார்த்த பேரன்பிற்குரிய ஒவ்வொருவரைப் பற்றியும் விரைவில் நான் எழுதுவேன்.

என்னுடன் பிறந்தவர்கள், என் இரத்த உறவுகள் எனக்காக பறிதவிப்பதென்பது இயல்பு. ஆனால் பேரன்பிற்குரிய எனது தாய்த்தமிழ் உறவுகள் - தமிழ்நாட்டிலாக இருக்கட்டும் அல்லது கடல் கடந்த புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்களாக இருக்கட்டும் இரவு பகலாக என் மீது காட்டிய பாசத்துடன் கூடிய ஆறுதலை எனது இறுதி மூச்சு விடும் காலம்வரை மறக்க முடியாது. குறிப்பாக என் உயிருக்கு நிகரான தமிமீழ உறவுகள் காட்டிய பாசம்... அதனை என்ன வார்த்தை கொண்டு பதிவு செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

ஒருவேளை ஏதாவது நேர்ந்திருந்தால் இந்த இழப்பினை இப்படித்தான் பார்த்திருப்பார்கள் என்று ஒரு கணம் நினைத்துப்பார்த்து நெகிழும் படியான தருணங்களை உயிர்ப்புடன் இருக்கும்போதே அதனை காண நேர்ந்தது கூட ஒரு கொடுப்பினைதான் என்று கூட சொல்லலாம். இதற்கெல்லாம் பிரதிபலனாக நான் அவர்களுக்காக, அவர்களின் உரிமை மீட்க அவர்களோடு வாழ்ந்துதான் காட்ட வேண்டுமே தவிர நன்றி சொல்லி அந்நியப்படுத்தவும் முடியாது, அந்நியமாகவும் முடியாது.

எங்களின் தமிழ்ப் பேரரசு கட்சி குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் எனது மரியாதைக்குரிய, தோழமைக் கட்சி தலைவர்களும், அவர்களின் தொண்டர்களும் மனம் நிறைந்து வாழ்த்தியது மறக்க முடியாது.

கலை உலகை சேர்ந்த எனது மரியாதைக்குரிய ஆளுமைகள், படைப்புலகை சேர்ந்த மாபெரும் ஆளுமைகள் தொடர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். மொழி கடந்து வாழும் பிற மாநிலத்தை சேர்ந்த எனது நெருங்கிய நண்பர்கள் பலர் வாழ்த்தியதும் நெகிழ்விற்குரியது.காட்சி மற்றும் எழுத்து ஊடகத்துறையில் உள்ள என் மீது பாசம் கொண்ட மாபெரும் ஆளுமைகளும், அங்கு பணி புரியும் என்னுடைய அன்பிற்குரிய சகோதரர்களும் தொடர்ந்து பாசத்தை பகிர்ந்து கொண்டது மறக்கவே முடியாதது.

முழுவதுமாக நான் மீண்டு வர மருத்துவம் மட்டுமல்ல. என் மீது அளவற்ற பேரன்பையும் பெரும் பாசத்தையும்ம் காட்டிய உங்கள் ஒவ்வொருவரின் பரிசுத்தமான "தாயன்பாலும்" தான் மீண்டு வந்திருக்கிறேன் என்பதை நிறைந்த நன்றிகளோடு கூறி தங்களின் முன்பு தலைவணங்கி நிற்கிறேன்.

இனி அடுத்தது என்ன? எம் இனம் காக்க...எம் மொழி காக்க...50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எம்மினத்தின் உரிமை மீட்க எவர் அத்து மீறினாலும் சனநாயக யுத்தம் செய்ய மீண்டும் தயாராக வேண்டியதுதான்.

நாங்கள் மட்டுமல்ல. நீங்களும் எங்களின் கைகளை இறுகப் பற்றுங்கள். எதிரிகளின் படை தகர்த்து இறுதிவரை உறுதியாக நின்று இனத்தின் உரிமை மீட்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details