கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற பதிவிற்கு ஏராளமானவர்கள் தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ராஜ்கிரன் பிரசன்னா உள்ளிட்ட திரைத்துறை சார்ந்தவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இவர்களை அடுத்து இயக்குநரும் நடிகருமான கௌரவ் நாராயணன் கந்தசஷ்டிகவசம் குறித்த சர்ச்சை வீடியோவிற்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அசைத்துப் பார்க்க நினைக்காதீர்கள் ஆடி போவீர்கள் - இயக்குநர் கௌரவ் நாராயணன் - கந்த சஷ்டி கவசம்
சென்னை: மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தயவுசெய்து கலவரத்தை ஏற்படுத்தாதீர்கள் என இயக்குநர் கௌரவ் நாராயணன் கந்தசஷ்டி விவகாரம் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது," மாதா, பிதா, குரு, தெய்வம் ஏன் இதில் தெய்வத்தை நான்காவதாக வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு நல்ல தாயின் மூலமாகத்தான் தந்தை யார் என்று நமக்கு தெரியும், ஒரு நல்ல தந்தையின் மூலமாகத்தான் நல்ல குரு யார் என்று நமக்கு தெரியும், ஒரு நல்ல குருவின் மூலமாகத்தான் தெய்வம் யார் என்று நமக்கு தெரியும். இந்த மூன்றும் சரியாக இருப்பவர்களுக்குத்தான் கடவுள் கண்ணனுக்குத் தெரியமாட்டார்.
கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலுக்கு கடவுள் இல்லை என்பது அவர்களுடைய நம்பிக்கை. அவர்கள் அப்படி இருப்பது அவர்களுடைய விருப்பம். ஆனால் எங்களுடைய நம்பிக்கையில் உள்ள கடவுளை விமர்சனம் செய்வது மற்றும் அசிங்கப்படுத்துவது உங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கப்போகிறது.
கடவுள் இல்லை என்று ஆயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ஆனால் எங்களுக்கு கடவுள் இருக்கிறது என்று கூறுவதற்கு எங்கள் நம்பிக்கை மட்டுமே. அதை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் ஆடிப்போய் விடுவீர்கள். கடவுளே இல்லை எனக் கூறிய ஏராளமானவர்கள் கோயில்களில் அரோகரா, கோவிந்தா என, கோஷம் போட்டிருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஆகையால் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தயவு செய்து கலவரத்தை ஏற்படுத்தாதீர்கள்" என அந்த வீடியோவில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.