சென்னை:கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான 'ஆகாய கங்கை' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மனோபாலா, இது வரையில் 40 திரைப்படங்கள் மற்றும் 16 தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி உள்ளார். மேலும், 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த மனோபாலா, தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாரதிராஜாவின் மாணவர் ஆவார்.
'நட்புக்காக' என்ற படத்தில் 'சிறுசு.. பெருசு..' என இவர் பேசும் வசனங்கள், அவரது கதாபாத்திரத்தை இன்றளவும் நம்முள் நிலைத்து வைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலமே நடிகராக அறிமுகம் ஆன மனோபாலா, ரஜினி, கமல், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் உடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், 69 வயதான மனோபாலா, நேற்று (மே 3) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். இதனையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மனோபாலாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முதல் திரை நடிகர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முக்கியமாக, நேற்று மணிரத்னம், ஹெச்.வினோத், தாமு, மோகன், கவுண்டமணி, தாமு, பி.வாசு, எல்.விஜய், சேரன், போண்டா மணி, பேரரசு ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேநேரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பாரதிராஜா, இளையராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.