ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தனது தரப்பு கருத்துகளைத் தற்போது கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க சென்னை தனியார் விடுதியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர், "2017 டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவேன் என்று முதலில் அறிவித்தபோது, இங்கு சிஸ்டம் சரியில்லை என்றேன். எனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை. ஒரு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் என்றால், இங்கு முதலில் அரசியல் மாற்றம் வேண்டும். அதுதான் ஒரு நல்ல ஆட்சிக்கு வழிவகுக்கும்.
தமிழ்நாட்டு மக்களிடம் அரசியல் மாற்றம் குறித்து எனது ரசிகர் மன்றத்தினர் பரப்புரை செய்து அவர்களிடம் எழுச்சியை உருவாக்க வேண்டும். நான் அரசியலுக்கு வருவது, பெயருக்காகவோ, புகழுக்காகவோ அல்ல. எனது நோக்கத்தை தமிழ்நாடு மக்கள் புரிந்துகொண்டு அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.
அவரின் இந்தப் பேச்சுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது கருத்தை செய்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது நாற்பது ஆண்டுகால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடும் ரஜினி என்ற மந்திரத்தைவிட, ரஜினி என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.