முருங்கைக்காய் ரகசியத்தைப் போட்டு உடைத்த பாக்யராஜ்! சென்னை: அட்டு படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இயக்கியுள்ள 'லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ் மற்றும் பேரரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட், சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார்.
இந்த விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி விடுதலைக்குப் பின்பும் சரி, மாற்றங்களை மக்களிடம் ஏற்படுத்தியதில் திரைப்படங்களின் பங்கு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் வந்த பிறகு தான் அந்த வரலாறே நம் மக்களுக்குத் தெரிந்தது. காவல் துறை பற்றி திரைப்படங்களில் இரண்டு விதமாகக் காட்டுவார்கள். அவர்களை கொடூரமானவர்களாக காட்டுவார்கள், அதே நேரம் நல்லவர்களாகவும் காட்டுவார்கள்.
இங்கு வந்திருக்கும் பாக்யராஜ் அவர்களுக்கு நானும் ரசிகன் தான். ஒரு முறை எங்கள் வீட்டில் இரவு மனைவி சாப்பாடு பரிமாறினார். அப்போது அருகில் இருந்த கொழுந்தியாள் எனக்கு மனைவி முருங்கைக்காய் துண்டுகளைப் போட்ட போது “போடு போடு நல்லா போடு” என்று கூறினார். எனக்கு அப்போது புரியவில்லை. பிறகு ‘முந்தானை முடிச்சு’ படம் பார்த்த பிறகு தான் அன்று நிறைய போடு என்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது” என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, “பாக்யராஜ் எவ்வளவு நல்ல கருத்துகளை, நல்ல கதைகளை சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரைப் படத்தில் வைத்தது தான். இந்த விழாவுக்கு வந்த பலரும் அதைப் பற்றி பேசும் போது அவர் செய்த பெரிய தவறு இது என்று தோன்றுகிறது. ஒரு படத்தில் இடைவேளையில் வருவதை இன்டர்வெல் பிளாக், இன்டர்வெல் லாக் என்பார்கள்.
சாதாரணமாக இருக்கிறது என்றால் இன்டர்வெல் பிளாக். அதில் ஒரு முடிச்சு போட்டுப் பிறகு அவிழ்த்து விடுவது தான், லாக். 'பாக்யராஜ் திரைக்கதை மன்னன்' என்பதை விட இடைவேளை மன்னன் என்று கூறலாம். ஏனென்றால் அவரது படங்களில் இடைவேளையில் அப்படி ஒரு முடிச்சு போட்டு விடுவார். அந்த முடிச்சை சரியாக அவிழ்த்தால் அந்தப் படம் வெற்றிப் படம். அவிழ்ப்பதற்குத் திணறினால், அது தோல்வி.
பெண்கள் ஆண்களுக்கு நிகராகப் பல பணிகளைச் செய்யலாம். ஆனால், ஆண்களைப் போலவே, ஆண்கள் மாதிரியே வாழ நினைக்கக் கூடாது. அங்கே தான் நிறைய பிரச்னை பெண்களுக்கு வருகிறது. நிறைய தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பெண்கள், ஆண் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தனது நண்பர்களைத் தைரியமாக அப்பா, அம்மாவிடம் அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தாமல் மறைத்தால் பிரச்னை வரும். குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தப்படும் நண்பன் எப்படிப்பட்டவன் என்று குடும்பத்தினர் கவனித்து விடுவார்கள். ஏனென்றால், அவர்கள் அனுபவசாலிகள்” என்றார்.
பின்னர் பேசிய இயக்குநர் பாக்யராஜ், “இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால். எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது, எனக்கு முருங்கைக் காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார்.
இன்னும் ரெண்டு பீஸ் போடச்சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்கு மேல் வேண்டாம். இது போதும் என்பார் பாட்டி. எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச்சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்த சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான், என் படத்தில் வைத்தேன்.
அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மதுஸ்ரீ, இங்கே எடைக் குறைப்பு பற்றிப் பேசினார். இப்படி சிரமப்பட்டு வெற்றி பெறுவதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. நான் சின்ன வீடு படத்தில் கல்பனாவுக்கு தினசரி அல்வா கொடுத்தேன்.
ஏனென்றால், அவர் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக. சிரமப்பட்டு உழைத்தால் தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறினார். 'லாக்' படக் குழுவினர் சார்பில் இந்த விழாவில் கேக் வெட்டி இயக்குநர் பாக்யராஜுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க:கடலுக்கு மேலே அஜித் பேனர்.. கடலுக்கு கீழே விஜய் பேனர்.. ரசிகர்கள் அலும்பல்..