சென்னை:தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் இன்று (அக்-20) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பில் சீனிவாசன் ஆஜராகி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகப் பாக்கு மட்டையில் செய்த பொருட்கள், மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்கும் என்பது குறித்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தத் தீவிரம் காட்டிவருவதாகவும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்கும் இயந்திரங்களை அக்டோபர் 28ம் தேதி முதல் செயல்படுத்தப் போவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாற்றுப் பொருட்கள் குறித்துப் பிரபலப்படுத்துவது தொடர்பான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும், அதன் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது? அதை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள் எத்தனை இயங்குகின்றன என்றும் கேள்வி எழுப்பினர். பதிவுசெய்யப்படாமல் செயல்படும் நிறுவனங்களுக்குச் சீல் வைக்க வேண்டும் எனக் கூறினர். மேலும் இது போன்று எத்தனை நிறுவனங்கள் உள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.