தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் நிறுவனம் மதுபான விவரங்களை வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம் - tasmac imported liquor price list

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Mar 17, 2023, 9:34 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மது வாங்குகிறது, எவ்வளவு மதுபானங்களை வாங்குகிறது, எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டும் வழங்கவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்கள் கொள்முதல் விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை டாஸ்மாக் நிறுவனம் வழங்கவில்லை என்று கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வணிக ரகசியம் என்று கூறி இந்த விவரங்களை வழங்க மறுத்தது தவறு என்றும், தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளை கருத்தில் கொள்ளாமல் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு என்றும், டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்வது வணிக ரகசியம் அல்ல என்பதால் தகவலை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், மதுபான கொள்முதல் தொடர்பாக நிறுவனங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வர்த்தக ரகசியம் என்பதால், இந்த விவரங்களை வழங்க முடியாது என்றும், தகவல்களை வெளியிட்டால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மூடி முத்திரை இடப்பட்ட உறையில் மதுபான கொள்முதல், விலை குறித்த விவரங்களை அறிக்கையாக அரசு தாக்கல் செய்திருந்தது. இரு தரப்பு வாதங்களையும், அறிக்கைகளையும் ஆய்வு செய்த நீதிபதி, எந்த நிறுவனத்திடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகின்றது என்ற விவரங்களை வணிக ரகசியமாக கருத முடியாது என்று உத்தரவிட்டார். அதோடு அரசு நிறுவனமான டாஸ்மாக், வெளிப்படைத் தன்மை உடன் இருக்க வேண்டும் என்றும், மதுபானத்தின் விலை என்பது வர்த்தக ரகசியம் அல்ல என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். பொது நலன் சம்பந்தப்பட்டுள்ளதாலும், பெரும் தொகையை லாபமாக பெற்றிருப்பதாலும், அந்த தொகை அரசு நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்போருக்கு இந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விவரங்களை வழங்க மறுத்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும்" என பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details