சிங்கப்பூர்: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக மே 23 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களில் செயல் அதிகாரிகளுடனும், அந்நாட்டு அமைச்சர்களுடனும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து, பின்னர் நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில் கலந்து கொண்டு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மு.க.ஸ்டாலின் முன்னணியில் கையெழுத்தாகின.பின்னர், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து தமிழ் கலைப் பண்பாட்டு நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதையடுத்து, சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் செல்லும் முன், ஸ்டாலின், சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தைச் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கச் சிங்கப்பூர் அமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.
இதையும் படிங்க: மன்னார்குடியில் சிங்கப்பூரின் தந்தை 'லீ குவான் யூ' நினைவுச் சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
முன்னதாக, சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது, “உங்களைப் பார்க்கும் போது நான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன், பூரிப்படைகிறேன், புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.
தமிழ்நாட்டுக்குள்ளே இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்தளவுக்குச் சிங்கப்பூர் என்பது என் சிந்தைக்கு இதமானவராக அமைந்திருக்கிறது. தமிழ்மொழியில் ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை முதன்முதலில் ஏற்றுக்கொண்டு செயற்படுத்திய நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரில் தமிழ் நாளிதழ்தான் முதலில் தோன்றியது. சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் இடம்பெற்றுள்ளது. இப்படி சிங்கப்பூரில் தமிழ் நீக்கமற நிறைந்திருக்க அடிப்படைக் காரணமாக இருந்த முதல் பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்குத் தமிழர்கள் சார்பாக நான் இந்த நேரத்தில் இந்த விழாவின் மூலமாக நன்றி செலுத்துவதாக" குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் முனைவருடன் சந்திப்பு: சிங்கப்பூரில், சிங்கப்பூர் வாழ் தமிழர் முனைவர் சுப.திண்ணப்பன் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு அவருக்கு புத்தகம் வழங்கி சிறப்புச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ் வழியில் பொறியியல் பாடப்பிரிவு நிறுத்தம்! அதிர்ச்சி அளித்த அண்ணா பல்கலைக்கழகம்