சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு, பி.டெக் தொழில்நுட்பம் போன்றவற்றில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வானது வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு இளநிலைப் பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் தலா 80 இடங்கள் என மொத்தம் 660 இடங்கள் உள்ளன.
பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், பி.டெக் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 40 இடங்களும், பால் வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக்கல்லூரியில் 20 இடங்களும் உள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக ஜூன் 12ம் தேதி காலை 10 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்தனர். இந்த நிலையில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு 18 ஆயிரத்து 752 மாணவர்களும், பி.டெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 3 ஆயிரத்து 783 மாணவர்கள் என 22, 535 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஜூலை 26-ம் தேதி காலை 10 மணிக்கு https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் பி.விஎஸ்சி மற்றும் ஏஎச் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பி.டெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறப்புப் பிரிவினரான விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு 16-ம் தேதியும், 17-ம் தேதி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் படிப்பிற்கும், 18-ம் தேதி பி.டெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான நேரடி கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும்.
ஆன்லைன் மூலம் நடைபெறும் பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கான முதல்சுற்றுக் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், மாணவர்கள் இது குறித்த விவரங்களை www.adm.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காய்ந்து வெடிக்கும் நிலம்... களை எடுக்கவும் முடியவில்லை என விவசாயிகள் வேதனை!