சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையத்தில், ஆறு வகையான பாடப்பிரிவுகளின் கீழ், மத்திய அரசின் என்சிடி சான்றுகளுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டு சேர்க்கைக்காக கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நடந்த கலந்தாய்விற்குப் பின்னர் பல பாடப்பிரிவுகளில் இடம் காலியாக உள்ளது.
இந்நிலையில், எட்டாம் வகுப்பு தேர்ச்சிக்கான குழாய் பொருத்துநர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பாடப்பிரிவுக்கான கணினி இயக்குபவர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், எலக்ட்ரிக் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 20ஆம் தேதி வரை தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்களுக்கான வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இப்படிப்புகளுக்கு முற்றிலும் இலவசப்பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிந்த பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. பயிற்சிபெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ் மற்றும் பயிற்சிக் காலத்தில் மாதம்தோறும் 500 ரூபாய் பயிற்சி ஊக்கத் தொகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.