சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நேர்காணலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் மற்றும் ஈரோடு மாவட்ட காங். தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். நேர்காணலை தொடர்ந்து தினேஷ் குண்டு ராவ் தலைமையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட முன்னாள் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத், வேளச்சேரி எம்.எல்.ஏ அசல் மவுலான உள்ளிட்டோர் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நேர்காணல் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், "ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நான் விரும்புகிறேன். அதை தினேஷ் குண்டு ராவ் இடம் தெரிவித்துள்ளேன். மேலிடம் தான் அதை முடிவு செய்யும்" எனத்தெரிவித்தார்.