சென்னை: சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை சாலை விதிமீறல்களில் அதிகளவில் கவணம் செலுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் விதிகளை மீறுவோர் மீது கடுமையான தண்டனைகளையும் அபராதத்தையும் விதிக்கப்படும் என அறிவித்தது.
மேலும், இருசக்கர வாகனங்களிலோ அல்லது கார்களிலோ தங்களை அடையாளப்படுத்தப்படும் எந்த ஒரு முத்திரையோ அல்லது ஸ்டிக்கரோ ஒட்டக்கூடாது என்றும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார் என்று புகார் அழிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
காரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறி ரூபாய் 2 ஆயிரத்து 500 அபராதமாக போக்குவரத்து காவல் துறையினர் விதித்துள்ளனர். சென்னை ஆலந்தூர் சிக்னல் அருகே தமிழ்நாடு அரசு முத்திரை பதித்த காரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் நம்பர் பிளேட் விதிமுறை மற்றும் தடை செய்யப்பட்ட நம்பர் பிளேட் பொருத்தியது,
மேலும் தடை செய்யப்பட்ட கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் சென்னை ஆலந்தூரை சேர்ந்த உமாசங்கர் என்பவர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனியின் காரை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். முன்னோடியாக செயல்பட வேண்டியவர்களே இப்படி செய்வது முறைதானா என்றும் இதற்கு தமிழ்நாடு காவல் துறை என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் எனப் பதிவிட்டிருந்தார்.