சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது எனக் கூறி எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் மற்றும் எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலத்தை இழந்த மக்கள் அனைவரும் உயர்நீதிமன்ற அறிவிப்புக்கு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மோடி அரசும், பழனிச்சாமி அரசும் சேர்ந்து செயல்படுத்த துடித்த சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் உணர்வுப்பூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது.
பா.ஜ.க அரசும், அடிமை சேவகம் புரியும் பழனிசாமி அரசும் சேர்ந்து, அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் ஏழை மக்களின் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள், தென்னந்தோப்புகள், பள்ளிக்கூடங்கள், கால்நடைப் பண்ணைகள், வனப்பகுதிகளை அழித்து, மலைகளை உடைத்து, இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒற்றைக்காலில் நின்றனர்.
இப்போது ஊருக்கு ஊர் போய், ‘நான் விவசாயி’ என்று ஓட்டுக்காக முழங்கும் முதலமைச்சர் பழனிச்சாமி, அன்றைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்த பிறகும் அந்தப் பகுதிக்கே போய், ‘8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன்’ என்று சபதம் போட்டார். அன்றைக்கு எப்படியாவது பா.ஜ.கவிடம் துண்டு போட்டுவிட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்த, தீயசக்தியின் புதிய அவதாரமும் இதற்கு ஆதரவு அளித்தது.