சென்னை: தியாகராய நகர் பர்கிட் சாலையில் பால் விநியோகம் செய்யும்போது வேலு என்பவர், தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வேலு, இரு சக்கர வாகனம் குறித்த தகவலை தி.நகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்வது தெரியவந்தது. பின்னர், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிரபல கைவரிசை திருடி தில் சாந்தி என்பவர் இரு சக்கர வாகனத்தைத் திருடியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து தில் சாந்தியை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் மாம்பலம் சீனிவாச நகர் 4-வது தெருவில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் மனைவி தான், தில் சாந்தி(53 ) என்பதும் இவர் திருமணம் ஆகிய பிறகும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக அவரது கணவர் செல்வராஜ், தில் சாந்தியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். மேலும் இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தில் சாந்தி திருவிழாக் காலங்கள் மற்றும் அட்சய திருதியை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, பல்லாவரம் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பர்தா அணிந்து கொண்டு திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு பெண்கள், குழந்தைகளிடம் நகைகளைத் திருடுவது, ஆண்களின் பர்ஸுகளை பிக் பாக்கெட் அடிப்பதும் தெரிய வந்தது. தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, திருமண மண்டபங்களில் புகுந்து திருடுவது என சென்னை மாநகரில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தில் சாந்தியின் மீது இருப்பதாகப் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், தில் சாந்தி தனது 25 வயது முதல் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர் போலீசாருக்குப் பயந்து மாம்பலம், குன்றத்தூர், பல்லாவரம், சேலையூர் என தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்து வந்ததும்; மேலும், குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் எனவும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும்,சில மாதங்களுக்கு முன்பு தில் சாந்தி செயின் பறிப்பில் ஈடுபட்டு, அதை விற்று தனது மகனுக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பல திருட்டில் ஈடுபட்டு வந்ததில் சாந்தி மீது வழக்குப் பதிவு செய்த மாம்பலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி... திமுக எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் - ஈபிஎஸ் கண்டனம்!