சென்னை:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுவருவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து 8ஆவது நாளாக முடங்கியுள்ளது.
மக்களவையில் அமளிக்கு இடையே வனப்பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கடந்த 27ஆம் தேதி நிறைவேற்றியது. மேலும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டு மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் கூட்டத்தொடரில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (Digital Personnel Data Protection Bill) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இந்த சட்டத்தின் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்க வைக்கும். எனவே இந்தச் சட்ட திருத்தத்தை வலுவாக எதிர்த்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை காக்க வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறப்போர் இயக்கம் கடிதம் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், '' நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (Digital Personnel Data Protection Bill) வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. மிக முக்கியமாக இந்த சட்டத்தின் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலு இழக்க வைக்கும் சட்டத் திருத்தம் செய்யப்போவதாக தெரிகிறது. ஏற்கனவே மத்திய அரசாங்கம் இந்த மசோதாவின் சட்ட முன்வரைவை கடந்த ஆண்டு வெளியிட்டபொழுது அதை எதிர்த்து, எங்கள் கருத்துகளையும் எதிர்ப்பையும் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி இருந்தோம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவில் தற்பொழுது உள்ள சட்டத்தில் பொதுவேலைக்கும் பொது நலனுக்கும் சம்பந்தமில்லாத தனிநபரின் தகவல்களையும், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கம் குறித்த தகவல்களையும் தர தேவையில்லை என்றும் அது பொது நலனில் அமைந்திருந்தால் மட்டுமே தர வேண்டும் என்றும் தெளிவாக உள்ளது. ஆனால், அதை தனிநபர் விவரங்கள் என்றாலே தரத் தேவையில்லை என்று சட்ட திருத்தம் செய்வதன் மூலம் RTI சட்டத்தையே ஒழித்துக் கட்டும் நோக்கில் இந்த வரைவு உள்ளது.
தற்பொழுது அமலில் உள்ள RTI சட்டத்தில் Right to Privacy, பறிபோகாத வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து தனிப்பட்ட நபர் தகவல்களுக்கும் விலக்களிப்பது RTI சட்டத்தை மிகப்பெரிய அளவில் வலுவிழக்க செய்து விடும். உதாரணத்திற்கு வீடு கட்டும் திட்டத்தில் உள்ள பயனாளிகள் முதல், அரசு ஊழியர்களின் வருகைப் பதிவேடு, சாதி மற்றும் கல்வித் தகுதி போன்றவற்றில் ஏமாற்றி போலியாக சேரும் அரசு ஊழியர்களின் ஆவணங்கள் வரை அனைத்தும் பெற முடியாத நிலை ஏற்படலாம்.
மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாத தகவல்களை பொது மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற பிரிவையும் சட்டத்திருத்தம் மூலம் தூக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் தெரிவிக்கப்படும் தகவல்கள் சாதாரண மனிதனுக்கும் தெரிய வேண்டும் என்பதே RTI சட்டத்தின் வலிமை. மாறாக டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா சட்டத்தை பயன்படுத்தி RTI சட்டத்தை வலு இழக்க செய்யும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக கருதுகிறோம்.
இந்த சட்டத்திருத்தம் வலுவாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மக்கள் கையில் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை இது மீண்டும் பறிக்கும் செயலாகும்.எனவே தாங்களும் தங்கள் கட்சியும் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்தத்தை வலுவாக எதிர்த்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை காக்க வேண்டுகிறோம்'' என அதில் கூறியுள்ளது.
இதையும் படிங்க :Manipur video: பாதிக்கப்பட்ட பெண்களின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!