சென்னை: விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்பட்ட 6 அடுக்கு மல்டிலெவல் கார் பார்க்கிங் நேற்று (டிச.4) அதிகாலை முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த கார் பார்க்கிங் செயல்படுத்தும் முறையை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இதனால் ரூ.20 முதல் ரூ.300 வரை இருந்த வாகன நிறுத்தகட்டணம் ரூ.30 முதல் ரூ.600 வரை பல மடங்கு உயர்த்தப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி 304 கார்கள் உள்ளன. அந்த ப்ரீபெய்ட் டாக்ஸி ஒவ்வொன்றும் தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு மாதம் ரூ.2,500 பார்க்கிங் கட்டணமாக வசூலித்தது. ஆனால் இனிமேல் தனியார் ஒப்பந்ததாரர் ஒவ்வொரு டாக்ஸிக்கும் ரூ. 6,500 மாதம் கட்ட வேண்டும்.
அதோடு 104 டாக்சிகளுக்கு மட்டுமே இந்த கட்டணத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் மீதிமுள்ள 200 கார்களுக்கு 30 நிமிடங்களுக்கு ரூ. 75 வீதம் கட்ட வேண்டும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் டாக்ஸி சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.