கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவதால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி வருகிற 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில், விமான பயணிகள் தங்களுடைய விமான பயணச் சீட்டுகள், போர்டிங் பாஸ்களைக் காட்டி விமான நிலையங்களுக்கு வாகனங்களில் பயணிக்கலாம் எனத் தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நடைமுறையில் பயணிகள் பலருக்கும் இ-பாஸ்கள் கிடைப்பதில்லை.
இதனால் முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகளை ரத்துசெய்ய வேண்டிய நிலை பல பயணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வெகுவாகக் குறைந்துவருகிறது.
இந்நிலையில், இன்று சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் 12 பேரும், சேலம் செல்லும் விமானத்தில் 22 பேரும் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் மதுரையிலிருந்து சென்னை வர 11 பேரும், தூத்துக்குடியிலிருந்து சென்னை வர 14 பேரும் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் சொற்ப எண்ணிக்கையிலான பயணிகளுடன் காலியான விமானங்களை இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று மொத்தம் 60 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் 30, சென்னைக்கு வரும் விமானங்கள் 30 ஆகும். நேற்று மொத்தம் 66 விமானங்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்த மேலும் ஐந்து பேருக்கு கரோனா