சுதந்திர இந்தியாவின் அடையாளமாக திகழும் இந்திய தேசியக் கொடியானது, பல்வேறு தலைவர்கள், லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்திற்கு பிறகு, முதன் முதலில் ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது.
போராடி பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும், நாட்டிற்காக தன் இன்னுயிரை நீத்த தியாகிகளை போற்றும் நினைவாகவும் உருவானதே, நம் இந்திய தேசியக் கொடி ஆகும்.
22 முறை மாற்றியமைக்கப்பட்ட தேசியக்கொடி
1947க்கு முன்னர் இந்திய தேசியக் கொடியானது பல முறை உருவாக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. தேசியக் கொடியானது மொத்தம் 22 முறை மாற்றி அமைக்கப்பட்டு, இறுதியாக காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில், ஒரே அளவில் இருக்கும் பட்டைகளோடு, நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் அசோக சக்கரம் தாங்கியபடி உருவாக்கப்பட்டது.
தேசியக் கொடியில் காவி, வெண்மை, பச்சை என மூன்று வண்ணங்கள் உள்ளதால், மூவர்ணக்கொடி என்று அழைக்கப்படுகிறது.
இந்த மூன்று வண்ணங்களுக்கும் ஒரு காரணம் உண்டு.
நிறக் காரணங்கள்
காவி – பலம், தைரியம்
வெண்மை – உண்மை, அமைதி
பச்சை – வளர்ச்சி, பசுமை, விவசாய செழிப்பு போன்றவற்றை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
நடுவில் 24 ஆரங்களை கொண்டு இடம் பெற்றுள்ள அசோகச் சக்கரம், கடல், மேகங்களின் நிறத்தை குறிப்பிட்டு, தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது.
தேசியக்கொடி அளவு முறை நிர்ணயம்
1951 ஆம் ஆண்டு இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால், தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறையானது கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு, துணியின் தரம், கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றி விவரிக்கிறது.
முக்கியமாக தேசியக் கொடி தயாரிப்பில் இந்த விகிதாச்சாரங்களை மீறுவது, மிகப்பெரிய குற்றமாகும். தேசியக் கொடியை பருத்தி, பட்டு இவற்றில் ஒன்றால் கையால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியில்தான் தயாரிக்க வேண்டும் என்பதும் சட்டமானது.
தேசியக் கொடிக்கு உரிய மரியாதை செய்ய இந்திய தேசியக் கொடிச் சட்டம், 2002ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.
கடுமையான சட்டங்கள் இயற்றல்
பொது இடங்களில் தேசியக் கொடியினை கிழித்தல், எரித்தல், அவமதித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது.
கொடி கிழிந்த நிலையிலோ, நிறம் மங்கிய நிலையிலோ கொடி ஏற்றக்கூடாது. அதுமட்டுமிலாமல் சூரிய உதயத்திற்கு பின்பு தேசியக் கொடியை ஏற்றி, சூரிய அஸ்தமனத்திற்குள் தேசியக் கொடியை இறக்கி விடவேண்டும்.
தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் உள்ளிட்ட பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. இத்தகைய சிறப்பு வாய்ந்த தேசியக் கொடியானது சுதந்திர, குடியரசு தினங்களன்று கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டு, இந்திய குடிமக்களால் மரியாதை அளிக்கப்படுகிறது. இருப்பினும் சுதந்திர, குடியரசு ஆகிய இருவேறு தினங்களில் கொடி ஏற்றப்படுவதில் வித்தியாசங்கள் உள்ளன. சுவாரசியமான அந்த வித்தியாசங்களைக் கீழே காண்போம்.
வித்தியாசம் 1:
சுதந்திர தினம்: கொடிக்கயிற்றை கீழிருந்து மேல் நோக்கி இழுத்து, பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவே கொடி இவ்வாறு ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்வானது "கொடியேற்றம்" (Flag hoisting) என அழைக்கப்படுகிறது.
குடியரசு தினம்: கொடியானது முன்னரே கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். பின்னர் முடிச்சு அவிழ்க்கப்பட்டு, கொடி பறக்கவிடப்படும். இதனை "கொடியை பறக்கவிடுதல்" (flag unfurling) என அழைப்பர்.
வித்தியாசம் 2:
சுதந்திர தினம்: சுதந்திரம் கிடைத்தபோது அரசியல், சட்டம் அமலுக்கு வரவில்லை. அதனால் அப்போது பிரதமர்தான் நாட்டில் முதல் மனிதராக (political head) கருதப்பட்டார். குடியரசுத் தலைவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தன்று பிரதமரே தேசியக் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் மாலையில் ரேடியோ, தொலைக்காட்சியின் மூலமாக மக்களிடம் உரையாற்றுவார்.
குடியரசு தினம்: குடியரசு தினத்தன்று அரசியல், சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவரே தேசியக் கொடியை பறக்கவிடுவார்.
வித்தியாசம் 3:
சுதந்திர தினம்: தேசியக்கொடியானது பிரதமரால் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்படும்.
குடியரசு தினம்: குடியரசுத் தலைவரால் டெல்லி ராஜ் பாத்தில் பறக்கவிடப்படும்.
இவைகளே இரு வேறு தினங்களில் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள் ஆகும்.
இதையும் படிங்க:சுதந்திர தினம்: ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்