மூப்பனார் பிரதமராவதை கருணாநிதி தடுத்தாரா? 1997 ல் நடந்தது என்ன? என்பது குறித்த ஒரு அலசல் சென்னை: தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினரிடையே அமித்ஷா பேசியதாக கூறப்படுவது தான் தற்போது விவாதப்பொருள். தமிழர் பிரதமராக வர வேண்டும் என கூறியதோடு, ஏற்கெனவே காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோர் பிரதமராக வாய்ப்பு ஏற்பட்ட போது அதனை தடுத்தது திமுக தான் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு உண்மை தானா? பிரதமராகும் வாய்ப்பு பெற்ற தமிழர்கள் யார் என்பது குறித்து அறிவதற்காக தமிழக அரசியலில் அனுபவம் பெற்ற செய்தியாளர் லோகநாதன் தங்கசாமியை அணுகினோம். ஈடிவி பாரத்திடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர் , "தமிழ்நாட்டிலிருந்து ரியல் கிங் மேக்கராக உருவெடுத்தவர் காமராஜர் ஒருவர் மட்டுமே. காமராஜர் ஒரு போதும் பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளை அவராக விரும்பியதில்லை. அவரது நோக்கம் அறிந்த அவரது அருகிலிருந்தவர்களும் அவரை ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியதில்லை. காமராஜரின் விருப்பமறிந்து செயல்படுவோரே அவரைச் சுற்றிலும் இருந்தனர்.
காமராஜருக்கு தேசிய அரசியலில் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்ததே தவிர, தானே பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. அதனால் தான் அவரால் இந்திரா காந்தியை உருவாக்க முடிந்தது. அதே இந்திரா காந்தியால் தானே பாதிப்புக்குள்ளான போதும், புதிய தலைவரை உருவாக்கும் எண்ணம் காமராஜருக்கு தோன்றவில்லை. தான் செய்த ஒரு தவறே போதும் என்ற முடிவுக்கு வந்தவராக, தேசிய அரசியலில் தனது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டார் என்கிறார் லோகநாதன்.
2 முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு தட்டிக்கழிக்கப்பட்டதாக அமித்ஷா கூறிய விவகாரத்தில், இந்த இரண்டாவது முறைக்கு ஒரு வித்தியாசமான பலரும் அறியாத வரலாறு உண்டு. 1996ம் ஆண்டு முதல் 97 வரை ஐக்கிய அணியின் (united front) தேவ கௌடா பிரதமராக இருந்தபோது, அவரை மாற்றவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பலமுனைகளில் இருந்து அழுத்தம் ஏற்பட்டது. அடுத்த பிரதமர் யார்? என்ற கூட்டம் டெல்லியில் லாலு பிரசாத் இல்லத்தில் நடந்தது. இதில் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்றன. இந்த நேரத்தில்தான், தமிழ்நாட்டில் திமுகவிற்கும், தமாகவிற்கு இடையே ஒரு உரசல் ஏற்பட்டது.
அப்போது, திமுகவை தமாகவினர் பகிரங்கமாக விமர்சித்து வந்தனர். அப்போதைய தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் சீட்டில், 20 தமிழ் மாநில காங்கிரசிடமும், 19 திமுகவிடமும் இருந்தன. அந்த கூட்டத்திலும், பிரதமர் வேட்பாளர் யார் என ஆலோசனை நடந்தது. அதன் இறுதியாக, வெளியுறவுத்துறையில் உயர் அதிகாரியாக இருந்து பிற்காலத்தில் அரசியலுக்கு வந்து தலைசிறந்த நிர்வாகி எனப் பெயர்ப்பெற்ற, ஐக்கிய குஜரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். எந்தவித குற்றச்சாட்டும் ஆளாகத அரசியல்வாதியாக குஜ்ரால் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, அவரை வாழ்த்தி பேசும்முறை வந்தபோது, தமிழில் பேசிய ப.சிதம்பரம், 'நாங்கள் யார் யாரையோ பெரிய இடத்திற்கு கொண்டுவர நினைத்தோம். அவ்வாறு கொண்டும் வந்துவிட்டோம். ஆனால், எங்களுக்கு யாரும் உதவவில்லை. நன்றி மறந்தவர்கள் என கடுமையாக சாடினார். அவர் இவ்வாறு மறைமுகமாக சாடியது கருணாநிதியையும், திமுகவையும் தான் என கருதப்பட்டது.
இதைக்கேட்ட கருணாநிதி, மூப்பனாரிடம் ஏன் இப்படி பேசுகிறார்? இதை தடுத்து நிறுத்துங்கள் எனக் கூறினார். ஆனால், மூப்பனார் முகத்தை திருப்பிக் கொண்டார். தொடர்ந்து புகைப்படம் எடுத்தப் பின்னர், GKM என அழைத்து வந்த கருணாநிதி அக்கணத்தில் அவரை மூப்பனார் என அழைத்தார். மூப்பனாருடன், ப.சிதம்பரத்தையும் ஒருமையில் இங்கே வாருங்கள் என்றார்.
உங்களுக்கு பிரதமராக வேண்டுமென ஆசை இருந்திருந்தால், நீங்கள் அதை என்னிடமோ, இல்லை வேறு யாரிடமோ சொல்லியிருக்கணும். ஆனால், உங்களுக்கு பிரதமராக வேண்டுமென ஆசைப்படுவதை யாரிடமும் நீங்கள் சொல்லவில்லை. நீங்கள் சொல்லவில்லையென்றால், உங்களின் தலைமை சீடராக இருக்கக்கூடிய ப.சிதம்பரம் சொல்லியிருக்கணும். கூட்டத்திற்கு முன்பு சொல்லாவிடினும் கூட்டம் தொடங்கியபோதாவது சொல்லியிருக்கணும்.
கூட்டத்தில் ஒருவரை தேர்வு செய்வதுவரை இருந்துவிட்டு, அதற்குப்புறம் என்னை விமர்சிக்கிறார். இதை நீங்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறீங்கள். பிரதமர் வேட்பாளரக உங்களை நீங்களே முன்னிறுத்தாத போது, உங்கள் கட்சியினரே முன்னிறுத்தாத போது, நான் எப்படி உங்களை முன்னிறுத்த முடியும் என கேள்வியெழுப்பினார், கருணாநிதி.
அந்த இடத்தில்தான், ப.சிதம்பரத்தை கடுமையான விமர்சன வார்த்தைகளால் சாடினார். இவ்வாறு அவரை அழைத்த நிலையில், இந்த வார்த்தை ரொம்ப நாட்களாக பேசுபொருளாக இருந்தது. 'நாங்கள் எல்லாம் தேர்ந்தெடுத்ததால் நீ மத்திய மந்திரி, நாளைக்கே இன்னொரு திமுகக்காரனை வைத்து உன்னைத் தோற்கடிப்பேன்' என்று கருணாநிதி தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து , இவ்விரு கட்சிகளுக்கும் இடையே அரசியலில் முறிவு ஏற்பட்டது. அடுத்து வந்த தேர்தலில், வாஜ்பாயை கருணாநிதி ஆதரித்தார். இவர்களிடமிருந்து விலகியே இருந்த தமாக, 2001 தேர்தலில் ஜெயலலிதாவை முதலமைச்சராக்க வேண்டுமென அதிமுகவை ஆதரித்தனர். இவ்வாறு எந்த ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் களம் கண்டாரோ மூப்பனார், அந்த ஜெயலலிதாவுடன் ஐந்தே வருடத்தில் அவர் கூட்டணி அமைத்துக்கொண்டார்.
இதனால், தனது அரசியல் வாழ்க்கையை முழுமையாக மூப்பனார் இழந்தார். இதைத்தான், தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பிரதமர் என்று அனைவரும் கூறுகிற விஷயம். ஒருமுறை ஜனாதிபதி தேர்தலின்போது, கருணாநிதி தான் ஜனாதிபதி என்று பேசப்பட்டு வந்தது. இதற்கு 'என் உயரம் எனக்கு தெரியும்' என்று கருணாநிதி பதிலளித்தார். தமிழ்நாட்டில் இருந்த 39 எம்பிக்கள் ஒன்றாக பிரதமரைத் தேர்ந்தெடுக்க நினைத்தாலும், அது இயலாதது. உத்திரப்பிரதேசத்தில் 80 எம்பிக்கள் உள்ளனர். உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் பின்னாளில் உருவான ஜார்க்கண்ட், உத்திரகாண்ட் இவையெல்லாம் சேர்ந்து பெரும்பான்மையை பெற்றுத்தரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 39 எம்பிக்களை வைத்துக்கொண்டு எளிதில் ஒரு பிரதமராக உருவாக இயலாது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தன்னுடைய கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக பேசியிருக்கலாம். ஆனால், இது இங்கு சாத்தியமில்லாதவைகளை அமித்ஷா சொல்வதாக மீம்ஸ் கிரியேட்டர்களால், 'எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்கவிழாவைப் போன்றது இது' என்று விமர்சிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 25 எம்பிக்களை உருவாக்குவோம், தமிழ்நாட்டிலிருந்து ஒருவரை வருங்காலத்தில் பிரதமராக உருவாக்குவோம் என அமித்ஷா சொன்னதை, அதன் கூட்டணியிலுள்ள அதிமுக கட்சியினர் கூட ரசிக்கவில்லை. அதனால், சென்னை மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் அமித்ஷா பேசியது, வெறும் வெற்றுப்பேச்சு; தனது கட்சியினரை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்கான பேச்சு. இது அடிப்படை ஆதாரம் ஏது இல்லாத பேச்சு என தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் மூத்த பத்திரிகையாளர் லோகநாதன்.