சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மக்களவை உறுப்பினர்தயாநிதிமாறன் எழுதியுள்ள கடிதத்தில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அப்பள்ளி உள்ளதால், சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு அச்சம்பம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாமகவின் நிறுவனர் ராமதாஸ், "சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு குறித்து பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள், அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன், "பத்மசேஷாத்ரி பால பவன் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் திகிலூட்டுகின்றன. அந்த குற்றவாளி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒன்றிய, மாநில பள்ளிக் கல்வித் துறைகள் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முறையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து, இந்த அச்சுறுத்தலுக்கு முடிவு எடுக்கவேண்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.