சென்னை:தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாக தாக்கி பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள், 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உட்பட 124 வனத்துறையினர், 86 காவல்துறையினர், 5 வருவாய் துறையினர் என 215 பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டப்பட்ட அதிகாரிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.