ரெப்கோ வங்கியின் தருமபுரி கிளை தலைமை மேலாளராக 2014ஆம் ஆண்டுமுதல் 2017ஆம் ஆண்டுவரை பதவி வகித்த கமலக்கண்ணன் என்பவர் ஆறு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா சிபிஐயில் புகார் அளித்தார். இந்தப் புகாரில் குற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என சிபிஐ விசாரணைக்கு எடுக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து, ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா தமிழ்நாடு காவல் துறைக்கு இது தொடர்பில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட காவல் நிலையத்தில் கமலக்கண்ணனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்று கடன்களை முடித்துவைத்ததாகக் கூறி, தனக்கு எதிராக வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா, போலி ஆவணங்களைத் தயாரித்து பொய் புகார் அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி காவல் நிலையத்தில் அளித்த புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கமலக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.