சென்னை: தருமபுரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரான மலர்விழி, தற்போது சென்னை அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் வரி வசூல் ரசீது புத்தகங்களை விலை அதிகமாகக் கொடுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில் மலர்விழி மீதும், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களான தாகிர் உசேன் மற்றும் வீரய்யா பழனிவேல் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மலர்விழியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் இன்று (ஜூன் 6) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், இவர் மீது தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாங்கப்பட்ட வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், இது தொடர்பாக வெளியான பத்திரிகை செய்திக் குறிப்பில், “தருமபுரி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியரும், தற்போதைய சென்னை அறிவியல் நகரின் துணைத் தலைவராக பணிபுரிந்து வரும் மலர்விழி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக கடந்த 2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை பணிபுரிந்தார்.
அப்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் 5வது மாநில நிதிக் குழு மானிய நிதியில் இருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 20 மற்றும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆகிய தேதிகளில் சொத்து வரி வசூல் ரசீது புத்தகங்கள், குடிநீர் கட்டணம் வசூல் ரசீது புத்தகங்கள், தொழில் வரி வசூல் ரசீது புத்தகங்கள் மற்றும் இதர கட்டண புத்தகங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் இரண்டு தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கிராம ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்துள்ளார்.
இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாமல், நேரடியாக இரண்டு தனியார் நிறுவனங்களில் இருந்து, இந்த வரி வசூல் புத்தகங்களை அதிகபட்ச விலைக்கு கொள்முதல் செய்ததில், மலர்விழி இரண்டு தனியார் நிறுவன உரிமையாளர்கள் உடன் கூட்டு சேர்ந்து 1 கோடியே 31 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாயை கையாடல் செய்தது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் நேற்று (ஜூன் 5) மலர்விழி, சென்னையைச் சேர்ந்த கிரசண்ட் நிறுவன உரிமையாளர் தாகீர் உசேன் மற்றும் நாகா டிரேடர்ஸ் உரிமையாளர் வீரய்யா பழனிவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக சென்னையில் உள்ள மலர்விழியின் வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், சென்னையில் 5 இடங்களிலும், விழுப்புரம் மற்றும் தருமபுரியில் தலா ஒரு இடங்களிலும் மற்றும் புதுக்கோட்டையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வரும் சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:IT Raids: கரூரில் 8 நாளாக நடந்த ஐடி ரெய்டு.. பெட்டி பெட்டியாக சிக்கிய ஆவணம்!