பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றிவந்த ராஜேஷ்தாஸ் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக டிஜிபி திரிபாதி, உள் துறைச் செயலாளர் (கூடுதல் தலைமைச் செயலாளர்) பிரபாகர் ஆகியோரிடம் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். மேலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வியும் எழுப்பினார்.
இதையடுத்து, உடனடியாக சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸை கட்டாய காத்திருப்பில் மாற்றம்செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது எழுந்துள்ள பாலியல் புகாரை விசாரிப்பதற்காகத் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் கொண்ட விசாரணைக்கு விசாகா குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
மேலும், விசாரணைக் குழுவில் பெண் ஐபிஎஸ் அலுவலர் காவல் துறை கூடுதல் தலைவர் (ஏடிஜிபி) சீமா அகர்வால், ஐபிஎஸ் அலுவலர் அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி தலைமை நிர்வாக அலுவலர் ரமேஷ் பாபு, லொரெட்டா ஜோனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜேஷ்தாஸ் ஏற்கனவே 2002ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.