சென்னை:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது. அப்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் அனைவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி, அறிக்கையையும் தயார் செய்து வருகின்றனர்.
மேலும், பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அமுதா ஐஏஎஸ் தலைமையில், உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது கொலை மிரட்டல், ஆயுதங்களைக் கொண்டு சித்திரவதை செய்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் திருநெல்வேலி குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.