சென்னை: மருத்துவமனையில் சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது மருத்துவர்களின் அலட்சியம் போக்கின் காரணமாக ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. எனவே இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A) மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் அளிக்கும் போது நிலைய அதிகாரி உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி வழக்குப்பதிவு செய்யும் முன் பல்வேறு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:குற்றம் சாட்டப்பட்ட அல்லது சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.மேலும் அனைத்து விதமான வாய்மொழி கருத்துகள் மற்றும் ஆவண ஆதாரங்களை உரிய அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மூத்த அரசு மருத்துவர்களிடம் குறிப்பாக,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடமிருந்து முறையாக வல்லுநர் கருத்து பெற வேண்டும் என்றார்.பின் மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)இன் கீழ் குற்ற செயல் என உறுதி செய்யப்பட்டால்,பின் மேல் நடவடிக்கைகள் போவதற்கு முன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனைகளைத் தவறாது பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.