சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து "புதிய பாரதம் படைப்போம்" என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், லயோலோ கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். லயோலோ கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளும் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் மேடையில் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, "புத்தகம் மற்றும் பேனா மிகப்பெரிய ஆயுதம். பெண்கள் படிப்பை தேர்வு செய்வதில் சுயமாக முடிவெடுத்து தங்கள் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய பெரிய நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதாக தற்போது எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல சிறு நகரங்களில் ஈரோடு, கரூர், திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 15 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 8 ஆயிரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் போக்சோ வழக்குகள் 22 ஆயிரத்து 413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வரதட்சணை கொடுமையால் 15 ஆயிரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.