சென்னை: உலகில் ஒவ்வொரு ஒரு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை காணாமால் போவதாகவும், அப்படி காணாமல் போகும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தையை பற்றிய தகவல் கிடைக்காமலே போவதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஒரு குழந்தை எப்படி காணாமல் போகிறது என ஆய்வு செய்ததில், ஒரு குழந்தை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும்போது இது போன்ற முடிவுகளை எடுக்கிறது.
அதாவது, பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காத நேரத்தில் ஒரு குழந்தை வீட்டை விட்டு வெளியேறலாம் என்ற முடிவை எடுக்கிறது. மேலும், பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்படும் குழந்தை, குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தல், ஆர்கான் கடத்தல், பெற்றோர் மற்றும் படிப்பிற்கு பயந்து செல்லுதல் உள்ளிட்டவை இதில் அடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குழந்தைகள் காணாமல் போனதற்கு எந்த வகையான காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தொலைந்து கிடைக்காத குழந்தைகள் அனைவருமே காணாமல் போன குழந்தைகளின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
ஆகையால், தமிழ்நாட்டில் இதுவரை காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக 'ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்' என்ற பெயரில் ஒரு சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் பட்டியல் தயாரித்து சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். அதற்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களின் உதவியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆகியோர் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு காணாமல் போல குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இரண்டு தினங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது.