சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்ற ரவுடியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த ஆண்டு இதேபோல, பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது சிறையில் இருந்த கருக்கா வினோத் கடந்த சனிக்கிழமை ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஆனால் இவரின் குடும்பத்தார் தரப்பில் இருந்து, இவரை சிறைக்குச் சென்று பார்க்கவோ, ஜாமினில் எடுக்கவோ இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கருக்கா வினோத் ஜாமினில் வெளியே வந்தது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், மற்றொரு வழக்கில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சிலர் ஜாமின் பெற்று வெளியே வரும் போது வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், அவர்களுக்கு பின்னால் கருக்கா வினோத் சிறையில் இருந்து வெளியே வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து, கருக்கா வினோத்தின் உறவினர்கள் யாரும் அவரை ஜாமினில் எடுக்காத நிலையில், சம்பந்தமே இல்லாத 70 வயது உடைய ஆணும், பெண்ணும் கையெழுத்து போட்டு, அதற்குரிய பணத்தைக் கட்டி, வழக்கறிஞர்களை வைத்து கருக்கா வினோத்தை ஜாமனில் வெளியே அழைத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
எனவே யார் சொல்லி, எதற்காக ஜாமினில் எடுத்தார்கள் என்கின்ற விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுடன், ரவுடி கருக்கா வினோத் சென்றது எதிர்ச்சியாக நடந்தது எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.