சென்னை: தமிழகக் காவல்துறையில் 35 டிஎஸ்பிகளை இடமாற்றம் மற்றும் பணி ஒதுக்கீடு செய்தும், சென்னை உட்படப் பல மாவட்டங்களில் காத்திருப்போர் பட்டியலிலிருந்த டிஎஸ்பிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்தும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
அதில் அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலிலிருந்த டிஎஸ்பி அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராகவும், தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சேலையூர் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை அடையாறு காவல் உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மத்திய குற்றப் பிரிவில் காவல் உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி டிஎஸ்பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாகப் பல வழக்குகளைச் சாதுரியமாகக் கையாண்ட சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த கிறிஸ்டியன் ஜெபசீலன் சேலையூர் காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் சென்னை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் பணியிலிருந்தவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலிலிருந்த 35 டிஎஸ்பி-களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பணி ஒதுக்கீடு செய்து சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பணியிட மாற்றம் மற்றும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள டிஎஸ்பிகள் ஒரு வாரக் காலத்திற்குள் பதவியேற்று பணிகளைத் தொடங்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 3500 வீடுகள், 175 சாலைகள் சேதம்; ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளர் தகவல்!