சென்னை:தென்காசியில் திருமணமான புது பெண்ணை கடத்தி, அவரது கணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் முறையான புகார் அளித்தும் காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதற்கு டிஎஸ்பி, மூன்று முறை தென்காசி மாவட்ட எஸ்பியிடம் அனுமதி கேட்டும், அனுமதி கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்பே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’தென்காசி கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.யினுடைய அலட்சியமான மற்றும் இரக்கமற்ற மனநிலை காவல் துறைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இது போன்ற பதற்றமான வழக்குகளில் மாவட்ட எஸ்.பி. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக’ டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.