சென்னை:பெங்களூருவைப் பூர்விகமாகக் கொண்ட பிரதீப் பிலிப், 1987ஆம் ஆண்டு நேரடியாக இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி, தமிழ்நாடு காவல் துறையில் தனது பணியைத் தொடங்கினார். 34 ஆண்டுகளாகத் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிய பிரதீப் பிலிப், ராமநாதபுரம் உள்பட நான்கு மாவட்டங்களில் போதைத் தடுப்புப் பிரிவு, காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சி மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவில் மண்டல காவல் துறைத் தலைவராக (IG) பணியாற்றியுள்ளார். பின்னர் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறைக் கூடுதல் தலைவராகவும் (ADGP) பணியாற்றினார்.
பிரிவு உபச்சார விழா
இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வு மற்றும் தமிழ்நாடு காவல் பயிற்சியின் காவல் துறைத் தலைவராக (DGP) பணியாற்றினார்.
காவல் துறையில், காவலர்கள் நண்பர்கள் குழுவை, தமிழ்நாடு காவல் துறைக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. இவர் காவலர் நண்பர் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
மேலுன் இவருக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திறந்தவெளி வாகனத்தில் சென்ற பிரதீப் பிலிப், காவல் துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.