சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருணாசாகர். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்துள்ளார். பின்னர் 1991 ஆம் ஆண்டு அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு காவல்துறை பேட்ச் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தார். அதன் பின், ஐபிஎஸ் அதிகாரியான கருணாசாகர் முதலாவதாகக் கும்பகோணம் ஏஎஸ்பி ஆகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.
கலப்பட சாராயம் குடித்துப் பல உயிர்ப் பலியான நிலையில், கருணாசாகர் திறம்படத் தீவிர சோதனை நடத்தி டன் கணக்கில் சாராயம் பறிமுதல் செய்தது பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு ஜாதி பிரச்னை உச்சத்திலிருந்த திண்டுக்கல், உசிலம்பட்டி ஆகிய மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை கருணாசாகர் பாதுகாத்தவர். பின்னர் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றிய போது விபத்து நிகழும் பகுதிகள் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பெயர்ப் பலகைகளை நிறுவினார்.
இவரது நடவடிக்கையால் சென்னையில் விபத்துகள் குறைக்கப்பட்டது. வெறும் போக்குவரத்து மட்டும் இல்லாமல் சட்டம் ஒழுங்கு பணியையும் சேர்த்து கருணா சாகர் சிறப்பாக பணியாற்றிவர். குறிப்பாக டிஐஜி ஆக கருணா சாகர் இருந்த போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் தத்து மகன் விஜயகுமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போது விரைந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனையை வாங்கி கொடுத்த செயல் கருணா சாகருக்கு மிகுந்த பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது.
பின்னர் கூடுதல் ஆணையர் வடக்கு, ஏடிஜிபி விரிவாக்கம் என பல முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்த கருணா சாகர் கடைசியாகக் காவலர் நலன் பிரிவு டிஜிபியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் 32 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டிஜிபி கருணாசாகர் மார்ச் 31 பணி ஓய்வு பெறுகிறார்.