சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்துத் துறைகளிலும் பல புதிய திட்டங்களை, மாநிலத்தினுடைய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அவற்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இன்று (3.7.2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டில் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக
நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் இன்றைய கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது. துறையின் செயலாளர்கள் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள், அதனுடைய தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்துத் துறைகளிலும் பல புதிய திட்டங்களை, மாநிலத்தினுடைய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அவற்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அப்படி அறிவிக்கப்படக்கூடிய திட்டங்களின் செயல்பாடுகளை பல்வேறு காலக்கட்டங்களில், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள், முத்திரைத் திட்டங்கள், மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் என பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ச்சியான ஆய்வுகளே, தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும் என்பதன் அடிப்படையில்தான் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
திமுக அரசு தொழிற்சாலைகளுக்கான உள்கட்டமைப்பில் அதிகக் கவனம் செலுத்தி வருவதால், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என தெரிவித்த அவர், தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலைகளான இடம் கையகப்படுத்தல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள் கட்டமைப்புகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்டாலும், அத்தகைய சவால்களில் தீவிர கவனம் செலுத்தி, பிரச்சினைகளுக்கு இடம் தராமல், உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்கள் தொடங்கவும், அதற்காக தொழில் முதலீடுகளைப் பெறவும் நாம் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், அந்த அடிப்படையில்தான், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே, 5 பில்லியன் டாலர் அளவிற்கு தொழில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தொழில் துறையில் எதிர்பார்த்த முதலீட்டை வெகு விரைவில் அடைந்துவிடும் என்று நாளேடுகள் தலையங்கம் தீட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிய முடிகிறது என தெரிவித்தார்.