தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திணறிய கட்சிகள் - ஒரு பார்வை - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட வளரும் கட்சிகளின் திண்டாட்டங்கள் குறித்து விளக்குகிறது, இந்த செய்தித் தொகுப்பு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திணறிய கட்சிகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திணறிய கட்சிகள்

By

Published : Feb 23, 2022, 8:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் முடிந்த நிலையில் ஆளும் திமுக அரசு தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் காட்டிலும் சிறிய கட்சிகளான பாமக, தேமுதிக, அமுமுக, நாம் தமிழர் கட்சி சொற்ப இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம்

தேசிய கட்சியான பாஜக குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில இடங்களில் பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியும், பிரதான எதிர்க்கட்சியுமான அதிமுவை பின்னுக்குத் தள்ளி பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகள் முதன்முறை எதிர்கொண்டன.

ஏற்கெனவே இந்தக் கட்சிகள் அக்டோபர் 2021ஆம் ஆண்டு நடந்த, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டது. எனினும் போதுமான வாக்குகளைப் பெறமுடியவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக, தேமுதிக தனித்து போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாமகவுக்கு 2 மாநகர உறுப்பினர் பதவியும், 60 நகராட்சி உறுப்பினர்களும், 109 பேரூராட்சி உறுப்பினர் பதவியும் கிடைத்தது.

இதேபோல தேமுதிகவுக்கு 8 மாநகர உறுப்பினர் பதவியும், 119 நகராட்சி உறுப்பினர்களும், 395 பேரூராட்சி உறுப்பினர்களும் தேர்தெடுக்கப்பட்டனர். இதே போல பாஜகவுக்கு 4 மாநகர உறுப்பினர் பதவியும், 37 நகராட்சி உறுப்பினர்களும், 185 பேரூராட்சி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தனித்து நின்ற கட்சிகள்

ஆனால், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் வெறும் 5 மாநகராட்சி உறுப்பினர்களும், 48 நகராட்சி வார்டு உறுப்பினர்களும், 73 பேரூராட்சி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 2011ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கையே ஆகும். இதே போல தேமுதிகவின் தேர்தல் பலம் வெகுவாகவே குறைந்துள்ளது என சொல்லலாம்.

கடந்த தேர்தலில் 8 மாநகராட்சி உறுப்பினர்களைத் தக்க வைத்துக்கொண்ட தேமுதிக, இந்த தேர்தலில் ஒரு மாநகராட்சி வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை. நகராட்சி வார்டுகளில் வெறும் 12 வார்டுகளைக் கைப்பற்றிய தேமுதிக, பேரூராட்சி வார்டுகளில் 23 இடங்களில் மட்டும் வென்றுள்ளது.

பாஜகவை பொறுத்தமட்டில் 2011ஆம் நடந்த நகர்ப்புற தேர்தலை விட உறுப்பினர்களின் எண்ணிக்கை சிறிது உயர்ந்துள்ளது. மாநகராட்சி வார்டுகளில் 22 வார்டுகளையும், 56 நகராட்சி வார்டுகளிலும், பேரூராட்சி வார்டுகளில் 230 இடங்களிலும் வென்றுள்ளது.

அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில், அமமுக 33 நகராட்சி வார்டுகளிலும், 66 பேரூராட்சி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் முதன்முறையாக தனித்துப் போட்டியிட்ட அமமுகவுக்கு இது நல்ல வெற்றி என்றார், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.

டிடிவி தினகரன்

தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வாக்காளர் மத்தியில் எடுபடவில்லை. ம.நீ.மய்யத்தால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு 6 பேரூராட்சி வார்டு கிடைத்துள்ளது.

இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, “தமிழ்நாட்டில் இந்த வெற்றி மூலம் பாஜக மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது” எனக் கூறிய நிலையில் இதனை பாமக, நாதக நிராகரித்துள்ளது.

பாஜக குறிப்பிட்ட இடங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதை வைத்து பாஜகவை மூன்றாவது பெரிய கட்சி என தீர்மானிக்க முடியாது என பாமகவின் மூத்த நிர்வாகிகள் கூறினார்கள்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

மக்கள் நீதி மய்யத்தின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் கூறுகையில், "நாங்கள் தோல்வியை ஏற்று கொள்கிறோம். மக்களின் மனம் மாற வேண்டும். மனம் மாறும் வரை எங்களது முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்," எனத் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் கருத்து பற்றிய கேள்விக்கு "அவர் திருப்திக்காக அந்தப் பதிலை (தமிழ்நாட்டின் மூன்றாம் பெரிய கட்சி பாஜக) சொல்லியிருக்கிறார்," என சூசகமாகப் பதிலளித்தார்.

இது குறித்து அரசியல் விமர்சகர் அ. மார்க்ஸ், நம்மிடம் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தல்களின் வெற்றிகள், மற்ற சட்டப்பேரவை தேர்தலிலோ அல்லது மக்களவைத் தேர்தலிலோ பிரதிபலிக்காது.

மேலும் பாஜக ஏற்கெனவே வெற்றி பெற்ற இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. கொஞ்சம் கூடுதல் இடங்களை அதே இடங்களில் கைப்பற்றியதால், பாஜக தமிழ்நாட்டின் மூன்றாம் அணி என்று கூறுவது அபத்தம்.

இதேபோல பாமகவும் தனக்குரிய வட மாவட்டங்களில்தான் குறிப்பிட்ட இடங்களில் வென்றிருக்கிறது" எனக் கூறிய அவர் தேமுதிக மற்றும் ம.நீ. மய்யக் கட்சிகள் அரசியல் களத்தில் இருந்து மீண்டெழுவது மிக கடினம் என்றார்.

எனினும், நாம் தமிழர் கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்கு விழுக்காடுகளை பெற்றதால் வரும் தேர்தல்களில் வாக்கு விழுக்காடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேர்தலில் அதிமுக தோல்வி: அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details