தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்! - கோயில் நிலங்களை அபகரித்தவர்கள்

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

temple land encroachers
temple land encroachers

By

Published : Sep 15, 2021, 3:41 PM IST

சென்னை: கோயில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் திருக்கோயிலின் ஐந்து அறங்காவலர்களை தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.

தற்காலிக நீக்கம் செய்ததை எதிர்த்து ஸ்ரீதரன் என்ற அறங்காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், மற்ற 4 பேருக்கு எதிரான தற்காலிக நீக்கத்திற்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளதாக கூறி, ஸ்ரீதரனை தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், சட்டப்படி விசாரணையை தொடர அனுமதி அளித்தார்.

அதே சமயம், கோயில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டுமென அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கோயில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, கோயில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி எண், மொபைல் எண்களை அனைத்து கோயில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:இது மோடி தந்த பணம்: அடம்பிடித்ததால் மோசடி வழக்கில் சிறை சென்ற நபர்!

ABOUT THE AUTHOR

...view details