தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசை வழிநடத்த ஸ்டாலின் நியமித்துள்ள புதிய அலுவலர்கள்: ஓர் பார்வை

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் அவரது செயலர்களாக உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ், எம்.எஸ் சண்முகம் ஐஏஎஸ் உள்ளிட்ட நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், தலைமைச் செயலராக பதவி வகித்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐஏஎஸ் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : May 11, 2021, 8:19 PM IST

Updated : May 11, 2021, 9:24 PM IST

தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை (மே.07) அன்று பதவியேற்றது. புதிய அரசு பதவியேற்ற அன்று பழைய அலுவலர்களை மாற்றம் செய்து புதிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் அவரது செயலர்களாக உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், அனுஜார்ஜ் ஐஏஎஸ், எம்.எஸ் சண்முகம் ஐஏஎஸ் உள்ளிட்ட நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், தலைமைச் செயலராக பதவி வகித்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐஏஎஸ் பணியமர்த்தப்பட்டு உள்ளார். கடந்த அதிமுக அரசால் நியமனம் செய்யப்பட்ட பழைய அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, நேர்மையான களத்தில் பெயர் வாங்கிய புதிய அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திமுக அரசு எதிர்கொள்ள உள்ள சவால்கள்

தமிழ்நாடு அரசு தற்போது கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவது, கடன் சுமையைக் குறைத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்துவது என பல்வேறு புதிய சவால்களை எதிர்கொண்டு உள்ளது. இதனால் புதிய அலுவலர்களின் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வரும் காலங்களில் இன்னும் பல அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்களில் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.

சுகாதாரத்துறை செயலராக நீடிக்கும் ராதாகிருஷ்ணன்

அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்களில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பணியிடமாற்றம் செய்யப்படவில்லை. பேரிடர்களில் பணிபுரிந்த அனுபவம் இருப்பதினால் அவரை இதுவரை இடமாற்றம் செய்யவில்லை. அதேபோல் கரானா இரண்டாம் அலையை எதிர்கொள்ள அந்தத் துறையில் அனுபவம் பெற்ற அலுவலர்களை தற்போது இடமாற்ற செய்ய வேண்டாம் என்பதாலும் அவர் தொடர்ந்து தனது பதவியில் நீடிக்கிறார். இந்நிலையில், பல அலுவலர்களை மாற்றினாலும் ராதாகிருஷ்ணனை மாற்றாதது குறித்து உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு டிஜிபி திரிபாதி அவர்களின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. டிஜிபியாக பதவி வகிப்பவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்பதினால் அவரையும் இடமாற்றம் செய்யவில்லை. புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதே முடிவு எடுத்து வைத்துவிட்டார். இச்சூழலில் புதிய அலுவலர்களின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

இறையன்பு, தலைமை செயலர்

சேலம், காட்டூர் கிராமத்தில் பிறந்தவர், வேளாண்துறையில் இளங்கலைப் பட்டம், சைக்காலஜியில் முதுகலைப் பட்டம், இந்தியில் எம்பிஏ பட்டம், எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. ஆங்கிலம், வணிக நிர்வாகத்தில் டாக்டர் பட்டம், வள்ளுவர்- ஷேக்ஸ்பியர் குறித்து டாக்டர் பட்டம் என கற்றுத் தேர்ந்தவர்.

1989ஆம் ஆண்டு பேட்ச் அலுவலரான இறையன்பு நாகை துணை ஆட்சியராக பதவி வகித்து, செய்தி ஒளிபரப்பு துறை செயலர், நகராட்சி நிர்வாக ஆணையர், முதல்வரின் கூடுதல் செயலர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தமிழ் மீது ஆர்வம் கொண்டவர் இவர் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். செப்டம்பர் 30, 2023ஆம் ஆண்டு இவர் ஓய்வு பெறுகிறார். இன்னும் இரண்டு ஆண்டு காலம் பதவிக்காலம் இருக்கும் நிலையில் சவாலான நேரத்தில் தலைமைச் செயலராக இறையன்பு பதவியேற்றுள்ளார்.

உதயசந்திரன் ஐஏஸ், முதல்வர் தனிச்செயலாளர்

முதலமைச்சரின் முதன்மை செயலராக பதவியேற்றிருக்கும் உதயசந்திரன் தொல்லியல் துறை இயக்குநர், பள்ளிக்கல்வித் துறை செயலர், தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய இயக்குநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். இவர் தொல்லியல் துறை இயக்குநராக இருத்தபோது கீழடி அகழ்வாய்வு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அருங்காட்சியகப் பணிகளில் ஈடுபட்டார். அதேபோல் பள்ளிக்கல்விதுறையில் மாணவர்களின் தரமதிப்பீட்டை கொண்டு வந்து மதிப்பெண் முறையை ஒழித்தார். சமச்சீர் பாடத்திட்ட வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றினார்.

அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவராக இவர் இருந்தபோது ஹால் டிக்கெட் இணையம் மூலம் பதிவிறக்கம் செய்வது, கணிப்பொறி சார்ந்த தேர்வு என முற்றிலும் கணிணிமயம் ஆக்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் கடன் பெறும் வசதி, மதுரை ஆட்சியராக இருந்தபோது பாப்பம்பட்டி, கீரிப்பட்டி தேர்தலை நடத்திக் காட்டியது, ஐடி துறையில் போதிய முதலீடுகளை ஈர்த்தது என பல்வேறு பணிகளை திறம்பட கையாண்ட அனுபவம் மிக்க அலுவலராவார்.

உமாநாத் ஐஏஎஸ்

முதலமைச்சர் அலுவலகத்தின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள உமாநாத், கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். திறம்பட பணியாற்றக்கூடிய இவர், பல்வேறு நலத்திட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு பெயர் பெற்றவர். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநராக பதவி வகித்த அலுவலர் இவர். கடந்த ஒன்றரை ஆண்டாக தமிழ்நாடு கொள்முதல் பிரிவு அலுவலராக திறம்பட பணியாற்றிய இவர், பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட RT-PCR கிட் கொள்முதல் குறித்த கேள்வியால் பணிமாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது புதிய பொறுப்பில் பணியமர்த்தப் பெற்றுள்ளார்.

எம்.எஸ் சண்முகம் ஐஏஎஸ்

முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்படும் முன் அருங்காட்சியக செயலராக இவர் பணியாற்றி வந்தார். 2002ஆம் ஆண்டு பேட்ச் அலுவலரான இவர், முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பாரத் டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாகக் கூறி, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்தார். இதனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அனு ஜார்ஜ் ஐஏஎஸ்

2003ஆம் ஆண்டு பேட்ச் அலுவலரான இவர், தொழிற்துறை, வணிகவரி செயலராகப் பதவி வகித்தவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதிச் சடங்குகளை அமுதா ஐஏஎஸ் உடன் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்த இவர், அங்கன்வாடி ஊழியர்கள் நியமனம் குறித்த தலையீட்டால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சங்கர் ஜிவால் ஐபிஎஸ்

சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக இவர் பதவியேற்றுள்ளார்.

1990்ஆம் ஆண்டு அலுவலரான சங்கர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன் ஆயதப்படை ஐஜியாக இவர் பணியாற்றி உள்ளார். சேலம், மதுரை எஸ்பியாக பணியாற்றிய அனுபவம் உள்ள இவர், மத்திய மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலராக பணியாற்றியுள்ளார். திருச்சி ஆணையராக பதவி வகித்தபோது பூட்டிய வீடுகளை எஸ்எம்எஸ் மூலம் கண்காணிக்கும் பணியைக் கொண்டு வந்தார். உளவுத்துறை ஐஜி, டிஐஜியாகவும் பதவி வகித்துள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜியாக நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியது, இரண்டு முறை ஜனாதிபதி விருதுகளை வென்றது எனத் திறம்பட பணியாற்ற இவர், தற்போது மாநகரக் காவல் ஆணையராக பதவியேற்றுள்ளார்.

சண்முக சுந்தரம், அரசு தலைமை வழக்கறிஞர்

மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்த இவர், இங்கிலாந்து உள்ளிட்ட நீதிமன்றங்களில் திறம்படப் பணியாற்றியுள்ளார். திமுக ஆட்சியில் 1996ஆம் ஆண்டில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் உடைய இவர், 2015-17ஆம் ஆண்டு காலத்தில் வழங்கறிஞர் சங்கத் தலைவராக பதவி வகித்தவர் ஆவார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட இவர், கிரிமினல் சட்ட நுணுக்களை கற்றுத் தேர்ந்துள்ளார். லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆதராங்களைத் திரட்டி வாதாடினார். தற்போது தலைமை வழங்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கொரானா தொற்று 7,000க்கும் மேல் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக ககன் தீப் சிங் பேடி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

1993ஆம் ஆண்டு பேட்ச் அலுவலரான ககன் தீப் சிங் பேடி, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஆட்சியராக பணியாற்றிவர் ஆவார். 2004ஆம் ஆண்டு சுனாமி நிவாரணத்தை சிறப்பாக கையாண்டார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டு பெருவெள்ளம், தானே புயல் உள்ளிட்ட பணிகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய இவர், வேளாண் துறை செயலராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கொரானாவைக் கட்டுப்படுத்தும் பெரும் பணியில் இக்கட்டான சூழ்நிலையில் இவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

கந்தசாமி ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி

அதிரடிக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற அலுவலரான இவர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத் சொராபுதீன் எண்கவுண்டர் வழக்கில் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிரடியாக விசாரித்தவர் ஆவார்.

கந்தசாமியின் ஏரியா ஃபைனான்ஷியல் கிரைம். அதாவது பணம் சார்ந்த குற்றங்களை டீல் செய்வதுதான். தேர்தலுக்கு முன்பு ஆளுநரை சந்தித்த திமுக ஒரு ஊழல் பட்டியலைக் கொடுத்தது. அந்த வழக்குகளை இவர் இனி விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னதாக துணை முதலமைச்சராக இருந்தபோதும் இதுபோன்ற அலுவலர்களை நியமனம் செய்து அரசை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.

’எடுத்த செயலை சரியாக முடிக்கக்கூடியவர் ஸ்டாலின்’

இந்நிலையில், இந்த நியமனங்கள் குறித்துப் பேசிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் பாலச்சந்திரன், ஸ்டாலின் மிகச் சிறந்த நிர்வாகத் திறமை உடையவர், கருணாநிதி போன்று பேச்சாற்றல் இல்லை என்றாலும் எடுத்த செயலை சரியாக முடிக்கக் கூடியவர். இது போன்ற பேரிடர் காலத்தில் ஆட்சிக்கு வந்துள்ள அவர் முன் பல்வேறு சவால்கள் உள்ளன. அதற்கு ஏற்றார் போல சிறந்த அலுவலர்களை நியமித்து ஆட்சியை நிர்வகிக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார். கரானாவை மிகச்சரியாக ஸ்டாலின் கையாள்வார்” என்றார்.

’கரோனாவைக் கட்டுப்படுத்த சரியான அலுவலர்கள் தேவை’

தொடர்ந்து இந்த நியமனங்கள் குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், ”திமுக 10் ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அவர்கள் முன் பல்வேறு விதமான சவால்கள் உள்ளன. அதை மீட்டெடுக்க இது போன்ற அலுவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் உள்ளார். கரானா போன்ற பேரிடரைக் கட்டுப்படுத்த சரியான அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் நிர்வாகத் திறன்மிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் பதவி வகித்துள்ளதால் முதலமைச்சராகவும் அவர் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என எண்ணுகிறார்” என்றார்.

புதிய அரசின் இச்செயல்பாடுகளும், அலுவலர்களின் நியமனமும் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், கரானாவைக் கட்டுப்படுத்தி பொருளாதார ரீதியிலும் தமிழ்நாடு மீண்டெழும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் துளிர்த்துள்ளது.

Last Updated : May 11, 2021, 9:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details