சென்னை: 2 நாட்கள் மிரட்டிய கனமழைக்குப் பின் சூரிய வெளிச்சத்தை செவ்வாய்க்கிழமை (05.12.2023) காலையில் பார்த்தது சென்னை மாநகரம். எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர் என மிரண்டு போன சென்னை மக்கள், சென்னை வெயில் சூடு சருமத்தில் பரவுவதை வாஞ்சையுடன் உள்வாங்குகின்றனர். என்ன நடக்கிறது சென்னையில்? 4,000 கோடி ரூபாய் செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் என்ன ஆனது ? சென்னை மாநகரின் தலைவிதி இது தானா? சென்னை வெள்ளத்திற்கு விடிவு காலம் கிடையாதா ? என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுவதை தவிர்க்க இயலாது.
2015ம் ஆண்டில் ஒரே நாளில் பெய்த மழையைக் காட்டிலும், தற்போது 2023ல் ஒரே நாளில் பெய்திருக்கும் மழையின் அளவு அதிகம். ஆனாலும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் ஒரே நாளில் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இம்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இவ்வளவு கனமழை பெய்த போதும் அதிகபட்சமாக 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டது என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ரூ.4,000 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் வடிந்துவிடும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னதாக அளித்த பேட்டியையும், தற்போதைய வெள்ளத்தையும் சுட்டிக்காட்டி வரும் மீம்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதனை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாதாரண மழைக்கே சென்னை மிதக்கும் நிலை, புயலுக்கு முன்னதாகவே உருவாகிவிட்டதாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் முதலமைச்சர், இவ்வளவு செலவு செய்திருப்பதால் தான் 47 ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்த போதும் நிலைமையை சமாளிக்க முடிந்தது என்கிறார் மு.க.ஸ்டாலின்.
2015ம் ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 33 செ.மீட்டர் வரையிலும் மழைப்பொழிவு இருந்தது. ஆனால் தற்போது சில இடங்களில் 24 மணி நேரத்தில் 37 செ.மீட்டர் வரையிலும் கூட, மழை பதிவாகியிருக்கிறது. இருப்பினும் சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் வெள்ளம் வடிந்ததாக மாநகராட்சி கூறியுள்ளது. டிசம்பர் 4ம் தேதி ஒரே நாளில் 254 மரங்கள் மழையில் விழுந்ததாகவும், இவற்றில் 227 மரங்கள் மாலைக்குள்ளாக வெட்டி அகற்றப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.
போரூரின் காரப்பாக்கம் பகுதியில் குடியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், தனது வீட்டினுள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும், அபாயகரமான நிலையில் வீட்டின் மேல்தளத்தில் குடும்பத்துடன் தஞ்சமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். பின்னர் அவரை மீட்கச் சென்ற தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அதே பகுதியில் பாலிவுட் நடிகர் ஆமீர் கானையும் மீட்டு அழைத்து வந்தனர்.
இதே போல சென்னையில் உயர்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதியாக கருதப்படும் அண்ணா நகரும் மழையின் பாதிப்புக்கு தப்பவில்லை. அங்கு வசிக்கும் நடிகர் விஷால் ஆவேசத்துடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனின் பெயரை குறிப்பிட்டு ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அண்ணா நகரில் இருக்கும் தனது வீட்டிலேயே, ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதாக அந்த வீடியோவில் விஷால் குறிப்பிட்டிருந்தார்.
டிசம்பர் 5ம் தேதி தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது. அண்ணா நகர், அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம், ஐசிஎஃப், மணலி, பெசன்ட் நகர் , அடையாறு, வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தண்ணீர் தேங்கி நிற்கும் குடியிருப்பு பகுதிகளில் மின்சார விநியோகம் இன்னமும் வழங்கப்படவில்லை. பிற மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இத்தோடு 20 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு, 162 நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது.
டிசம்பர் 5ம் தேதி காலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறினார். வெள்ள நீர் வடிந்து செல்வதற்காக துரிதமான நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆறுகளிலிருந்து தண்ணீர் வடிய முடியாத நிலை இருந்ததாக குறிப்பிட்டார். குறிப்பாக சென்னை போன்ற நகரங்கள் கடல் மட்டத்தின் உயரத்திலேயே அமைந்துள்ளன. இதனால் அலைகளின் உயரம் குறைவாக இருக்கும் (Low tide) நேரத்தில் மட்டுமே தண்ணீர் கடலுக்குச் செல்ல முடியும். 2015 ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம், தற்போது ஏற்பட்டிருப்பது இயற்கை வெள்ளம் எனவும் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க இயலாது என கூறினார்.
இதையும் படிங்க:மிரள வைத்த மிக்ஜாம் புயல்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர்!