சென்னை: சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரக் கூடிய பயணிகளில் சில பயணிகள் கடத்தி வரும் போதைப் பொருட்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து, போதைப் பொருட்களை கடத்தி வந்த கடத்தல்காரர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்.
நீதிமன்ற வழக்கு முடியும் வரையில், கடத்தல்கர்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் பெயரில், சுங்கத் துறையினர் பாதுகாப்பாக வைப்பார்கள். பின்னர், வழக்குகள் முடிவடைந்ததும் போதைப் பொருட்களை, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் ரசாயனம் மற்றும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிலையத்திற்கு (Chemical and medical waste incineration plant) கொண்டு சென்று, அங்கு பாய்லர் நெருப்பில் போட்டு எரித்து அழிப்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கு உரிய சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்த 13 கோடி ரூபாய் மதிப்புடைய 9 கிலோ ஹெராயின், 5 கிலோ மெத்தகுலோன் ஆகிய போதைப் பொருட்களை நீதிமன்றம் அனுமதி உடன் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவக் கழிவுகள் எரியூட்டு நிலையத்தில் பாய்லர் நெருப்பில் போட்டு எரித்து அழித்தனர்.