தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகிவருகிறது. இதைத் தடுக்க மாநில அரசு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி, இன்று காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதில், அரசு மற்றும் பொது போக்குவரத்துகளில் 50விழுக்காடு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும், ரயில் போக்குவரத்தில் அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையான முறையில் கடைபிடிப்பதற்காக, தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் ஐபிஎஸ் அலுவலர்கள் தலைமையிலான கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை புறநகர் பகுதிகளில் பேருந்துகளின் இருக்கைகளில் 50 விழுக்காடு பணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. விதிமுறைகள் தெரியாமல் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை அலுவலர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. பொதுமக்கள் ரயிலில் பயணிக்க முடியாத காரணத்தால் கூடுதல் பேருந்துகளை மாநில அரசு இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ள பல்வேறு பட்டுச்சேலை கடைகளில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். விதிகளை மீறி இயங்கி வந்த பட்டுச்சேலை கடைகள், அத்தியாவசியமின்றி திறக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளை மூட உத்தரவிட்டார்.
ராஜாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கும் அத்தியாவசிய கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தலா 500 ரூபாய் அபராதம் விதித்ததோடு, விதிகளை மீறி செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இன்று பகல் 11.45 மணிக்கு வணிகர்கள், தேநீர் கடைகள், சில்லறை வியாபாரக் கடைகள் மூடப்பட்டன. மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகள், மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவைகளும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி அடைக்கப்பட்டது.
நகரத்திற்குள் தேவையற்ற போக்குவரத்தைத் தவிர்க்கும் பொருட்டு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை
மருந்தகங்கள், பால் விநியோகம் தவிர தனியாகச் செயல்படும் மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனைக் கடைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
கரூர்
கரூர் நகர் பகுதியில் உள்ள மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. இதனால் கரூர் -கோயம்புத்தூர் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன . கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் 50 விழுக்காடு பயணிகளுடன் இயக்கப்பட்டன.
குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட கடைவீதி சுங்கக்கேட், பெரியபாலம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கிருஷ்ணராயபுரம், புஞ்சை புகழூர், காகிதப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு புதிய விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.