தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வற்றாத நதியாக ஓடிக் கொண்டிருந்தது வராக நதி. மருதமரங்கள் காசிக்கு அடுத்தப்படியாக வராக நதிக் கரைகளில் தான் அமைந்துள்ளது. நதியின் தென்கரையில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி உடனுறை, பாலசுப்ரமணியர் என மூன்று சன்னதிக்கும் தனித்தனி கொடி மரம் அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி சோத்துப்பாறை அணை, கல்லாறு உள்ளிட்ட நதிகளுடன் இணைந்து பெரியகுளம் நகர், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட ஊர்களின் வழியாக சுமார் 30 கி.மீ தூரம் பயணித்து வைகை அணையில் கலக்கிறது.
இதன் மூலம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார குடிநீர், நிலத்தடி மற்றும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வராக நதி காலப்போக்கில் கழிவுநீர், இறைச்சி மற்றும் குப்பைகளால் மாசடையத் தொடங்கின. இதைத் தூய்மைப்படுத்தி வராக நதியை வற்றாத நதியாக மாற்ற வேண்டும் என பெரியகுளம் பகுதி தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் முயற்சிகளை முன்னெடுத்தனர்.