இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்வால் இன்று உலகமே மாமல்லபுரத்தை உற்று நோக்குகிறது. வரலாற்றின் ஏடுகளில் முக்கிய இடம் வகிக்கும் இன்றைய நாளை எண்ணி பூரிப்படையும் அதே நேரத்தில், வரலாற்றின் பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் சீனர்கள் தமிழர்களுக்குப் பங்காளி உறவுகள் என்று புலப்படும். போதி தர்மரை வணங்கும் சீனர்கள் தமிழரின் எல்லையில் கால் பதிப்பது இது முதல் முறை அல்ல!
கி.மு 100இல் வாழ்ந்த சீனப்பயணி பான்-கோவின் வருகை குறிப்புகளும் கி.பி 550 - 600 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான்-லியின் வரலாற்று குறிப்புகளும் நம் தமிழரின் பண்பாடு அப்போதே உலகமயமாகிப் போனதற்கான அடையாளங்களாய் நிற்கிறது.
தமிழர்கள் திருக்குறளின் வழி நிற்பவர்கள் என்ற மா-டவான்-லியின் குறிப்புகளின் பிரதிபலிப்பே, அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வந்த சீனர்களையும் வரவேற்ற தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு என்றால் மிகையல்ல.
கி.பி 633இல் புத்தர் பிறந்த இடத்தை தரிசிப்பதற்கும், புத்த மதம் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரிப்பதற்கும் இந்தியாவிற்கு வருகை தந்தார் புத்தத்துறவி யுவான் சுவாங். சுமார் 15 வருடங்கள் இந்தியாவில் அவர் வாழ்ந்த போது, வட இந்தியாவில் ஹர்சரும் தமிழ்நாட்டில் முதலாம் நரசிம்ம வர்மரும் ஆட்சி புரிந்தனர். இங்கு அவர் கண்ட அரிய காட்சிகளையெல்லாம் தன்னுடைய 'சியூக்கி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.