சென்னை:சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாங் புயலுக்குப் பின்னர் வரும் 11ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகளை பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அறிவொளி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 11ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக தலைமை ஆசிரியர்கள் 8ந் தேதி முதல் பள்ளிகளுக்குச் சென்று பள்ளிகள் திறக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மழையின் காரணமாக பள்ளியில் பாதிக்கபட்ட சுற்றுச்சுவர்கள், வகுப்பறைகள், ஈடிபாடுகளுடன் கூடிய கட்டிடங்கள் அருகே மாணவர்கள் செல்லாதவாறு தடுப்பு வேலி அமைத்திட வேண்டும்.
பள்ளி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதி செய்து கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யதிட வேண்டும். வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
பள்ளியில் உள்ள கழிவறைகள் ஏதேனும் பழுதடைந்திருந்தால் அதனை சரி செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும். அதேபோல் பள்ளியில் உள்ள மின் இணைப்புகள் சரியாக உள்ளாத என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் பழுதடைந்து இருக்கும் மின்விசிறி மற்றும் மின்விளக்கு சரி செய்திட வேண்டும்.